பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி – ஒருவருக்கு முடியை சாப்பிடும் மனநோய் ஏற்படுவது ஏன்?

பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம், Vivek

படக்குறிப்பு, சிறுமி குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • எழுதியவர், சிது திவாரி
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் இருந்து, பெரிய முடிக் கொத்து ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சுமார் இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எடுக்கப்பட்ட இந்த முடிக் கொத்தின் எடை ஒரு கிலோ.

அதைத் தொடர்ந்து, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (SKMCH) நடந்த இந்த அறுவை சிகிச்சை விவாதப் பொருளாக மாறியுள்ளது.

குழந்தையின் வயிற்றுக்குள் இவ்வளவு முடி எப்படிச் சென்றது என்ற கேள்வி தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து ஆராய்ந்தது பிபிசி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

ஜனவரி 18ஆம் தேதி, வயிற்று வலியால் அவதிப்பட்ட தங்கள் 9 வயது மகளை, ஒரு தம்பதி முசாபர்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தனர்.

அதன் பின்னர், சிறுமிக்கு மூன்று வயதிலிருந்தே தலைமுடியைப் பறித்துச் சாப்பிடும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது.

சிறுமியின் தந்தை பிபிசியிடம் கூறுகையில், “அவர் தனது தலையில் உள்ள முடியை பறித்துச் சாப்பிடுவார். அப்படிச் செய்யக்கூடாது என்று பலமுறை கூறியும் அவர் அதை நிறுத்தவில்லை,” என்றார்.

பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம், Vivek

படக்குறிப்பு, சிறுமி தனது தலைமுடியைச் சாப்பிடுவதை வாடிக்கையாகச் செய்துள்ளார்.

இதனால் சோர்ந்துபோன பெற்றோர், தங்கள் மகளுக்கு மொட்டையடித்து விடுவதாகவும் கூறினார். ஆனால், அந்தச் சிறுமிக்கு 15 நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, வயிற்று வலியைத் தாங்க முடியாமல் சிறுமி உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டார். அவர் எதையாவது சாப்பிட முயன்றால்கூட வாந்தி வரும் என்கிறார் அவரது தந்தை.

அதைத் தொடர்ந்து, மருத்துவர் அளித்த ஆலோசனையின் பேரில் குடும்பத்தினர் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமிக்கு வந்த நோயின் பின்னணி என்ன?

முசாபர்பூர் மருத்துவக் கல்லூரியில் சிறுமி ப்ரீத்தி அனுமதிக்கப்பட்டபோது, ​​அவரது ஹீமோகுளோபின் அளவு 5.2 மட்டுமே இருந்தது.

ஜனவரி 21 அன்று மற்ற இரண்டு மருத்துவர்களுடன் சேர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர் அசுதோஷ் குமார் ப்ரீத்திக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தையின் வயிறு முழுக்க முடி நிறைந்திருந்தது.

“ப்ரீத்தி என்னிடம் வந்தபோது, ​​அவரது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. வயிற்றைப் பார்த்தாலே உள்ளே ஒரு கட்டி இருப்பதை கண்டறிய முடிந்தது. முதலில் ரத்தம் ஏற்றி, அவரது உடல்நிலையை நிலைப்படுத்தினோம்.

பின்னர், சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடியை அவரது வயிற்றுக்குள் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது” என்று பிபிசியிடம் விளக்கினார் அறுவை சிகிச்சை நிபுணர் அசுதோஷ் குமார்.

சிறுமியின் வயிறு முழுக்க முடியால் நிறைந்திருந்தது. இதனால் கடந்த 15 நாட்களாக திட உணவு சாப்பிட முடியாமல் திரவ உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்து வந்தார் ப்ரீத்தி.

இப்படியான சூழ்நிலையில், தலைமுடியை உண்ணும் இந்த நோய் குறித்த கேள்வி எழுவது இயல்புதான். அதற்குப் பதில் அளிக்கிறார் மருத்துவர் அசுதோஷ்.

“ப்ரீத்திக்கு டிரைக்கோட்டிலோமேனியா என்ற மனநோய் உள்ளது. அதன் விளைவாக அவருக்கு டிரைக்கோபெசோர் என்ற நோய் உருவானது. இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு வயிற்றில் முடி ஒன்றுகூடி, கொத்தாகச் சேர்ந்துகொள்ளும். அதை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ட்ரைக்கோட்டிலோமேனியா, ட்ரைக்கோபெசோர் மற்றும் பிகா என்றால் என்ன?

பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

டிரைகோட்டிலோமேனியா என்பது ஒரு மனநோய் என்று மருத்துவர் அசுதோஷ் குமார் கூறினார். இந்த நோயைப் பற்றி மேலும் அறிய, பாட்னா பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக உள்ள மருத்துவ உளவியலாளரான நிதி சிங்கிடம் பிபிசி பேசியது.

அப்போது, “டிரைக்கோட்டிலோமேனியா என்பது ஒரு மனநோய். அதில் ஒரு நபர் தனது புருவம், தலை மற்றும் தோலில் உள்ள முடிகளைப் பிடுங்கி எறிந்துவிடுவார்.

ஆனால் அப்படிப் பிடுங்கப்படும் முடிகளைச் சிலர் சாப்பிடுகின்றனர். அந்தப் பழக்கத்தைத் தூண்டும் உளவியல் நிலைக்கு ‘பிகா’ என்று பெயர். இந்த உளவியல் சிக்கலில் உள்ள மனிதர்கள், முடி மற்றும் குப்பை போன்ற சாப்பிட முடியாத பொருட்களைக்கூட சாப்பிடுவர்,” என்று நிதி சிங் இந்த நோய் குறித்து விளக்குகிறார்.

நிதி சிங்கின் கூற்றுப்படி, பிகா நோய் ஏற்பட மூன்று காரணங்கள் இருக்கலாம்.

  • முதலாவது காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி குறைபாடு.
  • இரண்டாவதாக உண்ணும் பழக்கம்/கோளாறு பிகா நோயை ஏற்படுத்தலாம்.
  • மூன்றாவதாக கவலை, மனச்சோர்வு அல்லது ஏதேனும் தீவிரமான மனநோயின் தொடக்கமாக இருக்கலாம்.

இந்த மனநோய்களால் உருவாகும் மருத்துவ நிலை டிரைகோபெசோர் என்று அழைக்கப்படுகிறது.

டிரைகோபெசோர் பற்றி மருத்துவர் அசுதோஷ் விவரித்தபோது, “முடி ஜீரணமாகாது. அது வயிற்றுப் பகுதியின் மேல் பரப்பில் ஒட்டிக்கொள்கிறது. ஒருவர் முடி உண்ணும் பழக்கத்தைத் தொடர்ந்தால், கொத்து போன்ற வடிவத்தில் அந்த முடி ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும். இதன் காரணமாக, ஒரு நபர் திட உணவை உண்ண முடியாமல் போவதால் டிரைகோபெசோர் கோளாறு ஏற்படுகிறது” என்று நோயின் தன்மைகளை எடுத்துரைத்தார்.

இதுபோன்ற பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்பட்டுள்ளது?

பிகாரில் சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயாளிகள் முடி சாப்பிடுவதை நிறுத்தினால், அவர்களால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும்.

எத்தனை பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேட்டபோது, உளவியலாளர் நிதி சிங், பிகாவை விட டிரைக்கோட்டிலோமேனியாவின் பாதிப்புகள் அதிகம் என்று விளக்கினார்.

அதேவேளையில், “வளரும் நாடுகளில் பிகா நோய் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இதற்குக் காரணமாக உள்ளன.”

“ஆனால், அதன் காரணமாக ஏற்படும் மனநோய் சிக்கல்கள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது,” என்று குறிப்பிடுகிறார் அவர்.

மேலும், வயது மற்றும் பாலின பாகுபாடின்றி இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். முசாபர்பூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் ப்ரீத்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

ஆனால் அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவரது தையல் குணமாக ஒரு வாரம் ஆகும். ப்ரீத்தியின் தையல் குணமான பிறகு அடுத்தகட்ட சிகிச்சை முறை என்னவாக இருக்கும் என்று அறுவை சிகிச்சை நிபுணர் அசுதோஷ் குமாரிடம் கேட்டோம்.

“பிரீத்தி நடத்தை சிகிச்சைக்காக மனநல பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுவார். இருப்பினும், இந்த விஷயத்தில், சிறுமியின் உடல் பலவீனமாக இருப்பதால், அவரது காயம் சரியாக குணமடைவதை உறுதி செய்வது மிகவும் அவசியம்” என்று விளக்குகிறார்.

இதே கேள்வியை, மருத்துவ உளவியலாளர் நிதி சிங்கிடம் கேட்டபோது, “அடுத்ததாக சிறுமிக்குத் தேவையான நடத்தை முறையைத் தூண்டுவதற்கு, நடத்தை மாற்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கூடுதலாக, சிறுமிக்கு உளவியல் மற்றும் ஊட்டச்சத்துப் பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து, அவருடைய பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார் நிதி சிங்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.