by adminDev2

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார். இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள்.

‘ஆசிரியர் மனசு’ திட்டத்​திற்காக திருச்​சியில் தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கி வைத்த அமைச்சர் மகேஸ், திட்டத்தின் மாநில ஒருங்​கிணைப்பாளராக இடைநிலை ஆசிரியரான ‘சிகரம்’ சதீஷ் என்பவரை நியமித்​தார். இவரை மையப்​படுத்​தித்தான் இப்போது சர்ச்​சைகளும் வெடித்துள்ளன. செல்வாக்கு, பணம் பலம், லாபி செய்யும் ஆசிரியர்​களின் கோரிக்கைகள் மட்டுமே கவனிக்​கப்​படு​கிறது. இதனால் இந்தத் திட்டத்தின் நோக்கமே திசைமாறிப் போய்க் கொண்டிருக்​கிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற வேண்டு​கோளுடன் இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், “இந்தத் திட்டம் தொடக்​கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டது. ஆனால், போகப் போக நோக்கம் சிதைந்து தொய்வடைந்து விட்டது. சம்பளம், பதவி உயர்வு, பணி மாறுதல், பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்​றப்​படுகிறது. அதேசமயம், செல்வாக்கான ஆசிரியர்​களுக்கு மட்டும் ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தில் கேட்டதெல்லாம் கிடைக்​கிறது.

தற்போது கல்வித்​துறையில் எந்த அதிகாரியை எங்கு பணிக்கு அமர்த்துவது என்பதை முடிவு செய்யும் அதிகார மையமாகவே ‘சிகரம்’ திகழ்​கிறது. சங்கங்களை உடைத்து புது சங்கங்களை உருவாக்கு​கிறது. ஜனவரி 5-ம் தேதி திருச்​சி​யில், ‘தமிழ்நாடு கல்வித் துறை தட்டச்​சர்கள் சங்கம்’ என்று ஒரு புது சங்கம் தொடங்​கப்​பட்டது. இதில், ‘சிகரம்’ சதீஷும் அமைச்சர் அன்பில் மகேஸும் பங்கேற்​றனர்.

அமைச்​சருக்கு நெருக்​க​மானவராக இருப்​பதால் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளே சதீஷைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆசிரியர்​களின் பிரச்​சினை​களைச் சொல்லத்தான் ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை ஆரம்பித்​தார்கள். ஆனால், அந்தத் திட்டத்​திலேயே இத்தனை குறைகள் என்றால் எங்கு போய் சொல்வது?” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்​பள்ளி ஆசிரியர் கூட்ட​ணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் சி.ஆரோக்​கிய​ராஜ், “இத்திட்​டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்​களுக்கோ, பள்ளி​களுக்கோ எந்த நன்மையும் கிடையாது. திட்ட ஒருங்​கிணைப்​பாளரான ‘சிகரம்’ சதீஷ் தனியார் பள்ளி​களின் நலனுக்காக மட்டுமே செயல்​படு​கிறார். தன்னை அழைத்து விழா நடத்தும் பள்ளி​களுக்கு முக்கி​யத்துவம் அளிக்​கிறார். மற்றபடி ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த எந்தப் பிரச்​சினையையும் அமைச்சர் கவனத்​துக்கு இவர் கொண்டு செல்வ​தில்லை.

அடுக்​கடுக்கான குற்றச்​சாட்டு​களுக்கு ஆளாகி வரும் சதீஷை திட்ட ஒருங்​கிணைப்​பாளர் பொறுப்​பிலிருந்து மாற்றி​விட்டு தகுதியான வேறொருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். பணி நிரவலில் திருப்​பைஞ்​ஞீலிக்கு வந்த ஒரு தலைமை ஆசிரியர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரே மாதத்தில் பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார்.

இப்படி செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்​தக்​கூடிய சமூக அமைப்பா இது? இதில் நானே நேரடி​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளேன். மண்ணச்​சநல்லூர் ஒன்றி​யத்​திலிருந்து லால்குடி ஒன்றி​யத்​துக்கு என்னை பணி மாறுதல் செய்தனர். ஒன்றரை ஆண்டுகள் நீதிமன்​றத்தில் போராடி, மீண்டும் மண்ணச்​ச நல்லூர் ஒன்றி​யத்தில் பணிக்கு திரும்​பினேன்.

இதனால் எனது சீனியாரிட்டி பாதிக்​கப்​பட்​டுள்ளது. என்னைப் போல் இன்னும் எத்தனையோ ஆசிரியர்கள் குமுறிப்போய் உள்ளனர்” என்றார். இந்தக் குற்றச்​சாட்டுகள் தொடர்பாக ‘ஆசிரியர் மனசு’ திட்ட ஒருங்​கிணைப்​பாளர் ‘சிகரம்’ சதீஷிடம் விளக்கம் கேட்டோம். “இந்தத் திட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்​துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்​பட்​டுள்ளன.

இதில், தனிப்பட்ட முறையில் பாதிக்​கப்பட்ட ஆசிரியர்​களின் மனுக்கள் ஒன்றுகூட நிலுவையில் இல்லை. சிபிஎஸ் ரத்து போன்ற அரசின் கொள்கை சார்ந்த விஷயங்கள் தொடர்பான மனுக்கள் தான் நிலுவையில் இருக்​கின்றன. எந்தவித பிரதிபலனும் பாராமல் ஆசிரியர்​களின் கோரிக்கைகளை தொகுத்து அமைச்​சருக்​கும், அதிகாரி​களுக்கும் அனுப்பி வைக்கும் போஸ்ட் மேன் வேலையை மட்டுமே நான் செய்கிறேன். அதிகார மையமாக செயல்​பட்​ட​தில்லை.

சிறு சிறு சங்கங்களை சார்ந்​துள்ள ஆசிரியர்​களுக்கு இந்தத்​திட்டம் பெரிய வடிகாலாக உள்ளது. இதை பொறுக்க முடியாத சிலர் என் மீதும், திட்டத்தின் மீதும் வீண் பழியை சுமத்து​கின்​றனர். கீழ்நிலையில் உள்ள ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களை கேட்டால் இத்திட்​டத்தின் செயல்​பாடுகள் நன்கு தெரியும். எந்த அதிகாரியையும் பணியில் அமர்ந்தும் அதிகாரம் எனக்குக் கிடையாது.

இது அதிகாரப் பதவி அல்ல. ஆசிரியர்களை ஒருங்​கிணைக்கும் பொறுப்பு. காரியம் சாதிக்க முடியாத சில ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பொத்தாம் பொதுவாக குற்றம்​சாட்டு​கின்​றனர். வேறு என்ன சொல்ல” என்றார். ஆயிரம் தான் இருந்​தாலும் நெருப்​பின்றி புகையாது. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விவகாரத்தை இனியும் உரிய முறையில் விசாரிக்​கா​விட்டால் ‘ஆசிரியர் மனசு’ திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே திசை மாறிப் போய்விடும் என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்​கள்​!

தொடர்புடைய செய்திகள்