by adminDev

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் 36% உயர்வு: நேபாள அரசு அறிவிப்பு எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதற்கான கட்டணத்தை நேபாள அரசு 36 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர்மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது 36 சதவீத கட்டண உயர்வு ஆகும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நேபாள அரசு வட்டாரங்கள் கூறும்போது, “நேபாள அரசின் ஒட்டுமொத்த வருவாயில் 4 சதவீதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் கிடைக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். இதனால் மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை குறையாது. புதிய கட்டண உயர்வு ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

பிரிட்டனை சேர்ந்த மலையேற்ற வீரர் கென்டன் கூறியதாவது: சீனாவின் திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரம் மீது ஏறலாம். ஆனால் அந்த மலைப்பாதை மிகவும் செங்குத்தானது. அந்த வழியாக சிகரத்தில் ஏற முடியாது. நேபாளம் வழியாகவே எவரெஸ்ட் சிகரம் மீது ஏற முடியும். சாகசத்துக்காகவே பலரும் எவரெஸ்ட் மீது ஏறுகின்றனர். இதற்காக ஒவ்வொருவரும் பல லட்சங்களை செலவிடுகின்றனர். நேபாள அரசு கட்டணத்தை உயர்த்தியிருப்பது மலையேற்ற வீரர்களிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

கடந்த ஆண்டில் எவரெஸ்ட் சிகர மலைப்பகுதிகளில் இருந்து 119 டன் குப்பைகளை நேபாள அரசு அகற்றி உள்ளது. மேலும் மலையேறியபோது உயிரிழந்த 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற பணிகளுக்கு நேபாள அரசு அதிக தொகையை செலவிட நேரிடுகிறது. எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இவ்வாறு கென்டன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்