தெலங்கானாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்ததாக கணவர் கைது – இன்றைய முக்கிய செய்திகள்

தெலங்கானா பெண் கொலை வழக்கு

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கை: இதில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்

இன்றைய (24/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

தெலங்கானாவில் ஒருவர் தன் மனைவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்ததாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த நபர் வேகவைத்த உடல் பாகங்களை பின்னர் ஏரியில் வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. 45 வயதான அவர் ஹைதராபாத்தில் உள்ள டி.ஆர்.ஓவில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி வேங்கட மாதவி. அவர் ஜனவரி 16-ஆம் தேதி அன்று காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பாக போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது, அவர்களுக்கு கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குருமூர்த்தியிடம் கடுமையாக விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையின்போது, குருமூர்த்தி தன்னுடைய மனைவியை தானே கொன்று, பிறகு மீராபேட் ஏரியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்று அச்செய்தி குறிப்பிடுகிறது. இத்தம்பதியினருக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது இந்த கொலைக்கான ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

‘அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயலும் பாலியல் துன்புறுத்தலே’

பணியிடங்களில், பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும் கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் அமைந்திருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்த பார்த்தசாரதி எனும் நபர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 3 பெண்கள் குற்றம்சாட்டினர். இந்த புகாரை விசாராணை செய்த விசாகா குழு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்கக்கூடாது என்ற பரிந்துரையை வழங்கியது. இதனை எதிர்த்து அந்த நபர் சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம் விசாகா கமிட்டியின் பரிந்துரையை ரத்து செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் துணை தலைவர் மெர்வின் தன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்ட நபர், பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பின்னால் நின்று கொண்டு அவர்களை தொட்டுப் பேசுவதும், கைகுலுக்குவதும், உடையின் அளவு என்ன என்று கேட்டும் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்று வாதிட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எந்த ஒரு உள் நோக்கத்துடனும் அந்த பெண்களுடன் பேசவில்லை என்றும், உயர் அதிகாரி என்ற முறையில் அப்பெண்கள் செய்யும் பணிகளை அவர்களுக்குப் பின்னால் நின்று கண்காணித்ததாகவும் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.என். மஞ்சுளா, பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும் கூட ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்தான் என்று கூறி, தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார் என்று தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு – ஆளுநர் ரவி ஒப்புதல்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதாக்களை தமிழக அரசு தாக்கல் செய்தது.

அந்த சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி10ம் தேதி தாக்கல் செய்தார். அந்த மசோதாக்கள் ஜனவரி 11-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டத்திருத்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் தேவைப்படுவதால் அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று தினமணி நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தண்டனைகளை அதிகரிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல்

பட மூலாதாரம், TN DIPR

படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இச்சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்

புழுதிவாக்கம் ஏரியை பராமரிக்க பொதுமக்கள் வேண்டுகோள்

சென்னை மடிப்பாக்கம்-உள்ளகரம் பகுதியில் அமைந்துள்ள சித்தேரியின் நிலைமை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த ஏரியை முறையாக பயன்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்கூட, இந்த ஏரியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் போக்கு அதிகரித்துள்ளது.

ஏரிக்கு நடைபாதை பயிற்சி மேற்கொள்ள வரும் மக்கள் மத்தியில் இந்த ஏரியின் சுத்தம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய துறையினர் இந்த ஏரியை சுத்தம் செய்வதில்லை என்றும் உள்ளூர் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை ரூ.2,000 ஆக உயர்த்த தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றம்

பட மூலாதாரம், PARLIAMENT.LK

படக்குறிப்பு, இலங்கை நாடாளுமன்றம் (கோப்புப்படம்)

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற பராமரிப்புக் குழு தீர்மானித்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பி ஒருவரின் தினசரி காலை உணவுக்கு 600 ரூபாயும், மதிய உணவுக்கு 1,300 ரூபாயும், மாலை தேநீருக்கு 100 ரூபாயும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எம்.பி ஒருவரின் காலை உணவுக்கு 100 ரூபாயும், மதிய உணவுக்காக 300 ரூபாயும் மற்றும் மாலை தேநீருக்காக 50 ரூபாயும் அறவிடப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு