10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை – பிரதமர் ஹர

by 9vbzz1

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்று பிரதமர் குறிப்பிடுகிறார். ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தை ஆளும் தரப்பின் உறுப்பினர் பயன்படுத்துகிறார். அந்த வாகனத்தின் புல்லுக்கட்டு ஏற்றப்பட்டுள்ளது. சொகுசு வாகனம் வழங்கவில்லை என்று குறிப்பிடுகின்றீர்கள்,ஆனால் அமைச்சர் வசந்த சமரசிங்க அதிசொகுசு அரச வாகனத்தை பயன்படுத்துகிறார் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்களுக்கான வினாக்கள் வேளையின் போது எதிர்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஆளும் தரப்பினருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை. விசேட தேவையுடைய சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் பார்வை குறைப்பாடு உள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் அவருக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படவில்லை என்று பிரதமர் இவ்வாறு கூறினாலும் மாதிவெலவில் வாகனங்கள் உள்ளன. பிரதமர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும் ரேஞ்ச் ரோவர் வாகனமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் உள்ளது. வீ 8 வாகனத்தை விடவும் ரேஞ்ச் ரோவருக்கு செலவு அதிகமாகும். அவரின் பெயரை வேண்டுமென்றால் கூறுகின்றேன். அவர் அமைச்சர் வசந்த சமரசிங்க.

பி எச் 1208 என்ற இலக்கமுடைய வாகனமொன்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவரிடம் இருக்கிறது. அவரின் பெயரை கூற போவதில்லை. பண்டாரவளை பூனாகலை தோட்டத்தில் அந்த வாகனத்தில் புல் கட்டுகளை ஏற்றிச் செல்கின்றது. இது தொடர்பான விடயத்தை சபையில் சமர்ப்பிக்கின்றேன்.

பசறை ஒருங்கிணைப்பு குழுவுக்கு குறித்த வாகனம் வந்துள்ளது. லுனுகல ஒருங்கிணைப்பு குழுவுக்கும் மற்றும் மாவட்ட கூட்டத்திற்கும் வந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் அந்த வாகனம் பயன்படுத்தப்படுகின்றது. இதில் புல் கட்டுகளை ஏற்றுகின்றனர். இது அரசாங்கத்திற்கு சரியில்லை. இப்படி இருக்கையில் நீங்கள் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிடுகின்றீர்கள் என்றார்.

இதன்போது பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, அதனை எனக்கு அனுப்புங்கள் தேடிப்பார்கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து மேலதிக கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண,

பிரதமர் சபையில் கூறும் கருத்தை சரியானதாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகிலோ அல்லது மாதிவெல வீட்டுத் தொகுதியிலோ எவரேனும் அதிகாரியை நியமித்தாலோ அல்லது சிசிடிவி கமராக்களை ஆராய்ந்தாலோ இதனை புரிந்துகொள்ள முடியும்.

எமக்கு தெரியும் வகையில் காலிமுகத்திடலில் காண்பிக்கப்பட்ட வாகனங்களில் அரைவாசி இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமே உள்ளன. பிரதமரை தவறாக வழி நடத்துகின்றனரா, என்று தெரியவில்லை. நீங்கள் இவற்றை இல்லாது செய்வதாக கூறியே வந்தீர்கள். இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார்,

இதற்கு எழுந்து பதிலளித்த பிரதமர் , ஆளும் தரப்பினர் உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வாகனங்கள் தொடர்பில் எவ்வித பிர்ச்சினைகளும் கிடையாது. நாங்கள் அமைச்சுகளுக்கு சென்று பார்த்த போது சூழலுக்கு குறைந்தளவான பாதிப்புகளை கொண்ட வாகனங்களை ஆராய்ந்தோம். ஆனால் அங்கே அதிகளவில் வீ8 போன்ற வாகனங்களே இருந்தன. கஷ்டப்பட்டு நாங்கள் அவற்றை தேர்ந்தெடுத்தோம். எனினும் வாகனங்கள் இல்லாத பிரதி அமைச்சர்கள் உள்ளனர். தமது தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் உறுப்பினர்களும், அமைச்சர்களும் உள்ளனர். அவர்களின் தனிப்பட்ட வாகனங்களின் தன்மை தொடர்பில் நாம் எதனையும் கூற முடியாது. எவ்வாறாயினும் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கு வாகனங்கள் அவசியமாகும். நாங்கள் வாகனங்கள் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை.

உத்தியோகபூர்வமாக பயன்படுத்தக் கூடிய மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாகனங்களை எமக்கு பெற்றுக்கொள்ள முடியும். எமது அமைச்சின் எரிபொருள் செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 3.24 மில்லியன் ரூபாவாக இருந்த செலவை ஒரு மில்லியனாக குறைத்துள்ளோம். பிரதமர் அலுவலகத்தில் குண்டு துளைக்காத வாகனங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தவில்லை. இதனூடாக 37 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளோம். இதனால் எமது வாகன பயன்பாடு தொடர்பில் தேடுவது வேடிக்கையானது என்றார்.

தொடர்புடைய செய்திகள்