‘தீவிர இடதுசாரி’ என டிரம்ப் இந்த பாதிரியாரை விமர்சித்தது ஏன்? சர்ச்சை என்ன?

டொனால் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிஷப் மரியன் எட்கர் புடே முன் வைத்த உணர்வுபூர்வமான வேண்டுகோளை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்
  • எழுதியவர், லெபோ டிசெகோ
  • பதவி, பிபிசி உலக சேவை

வாஷிங்டன் டிசியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒரு வழிபாட்டின்போது, பால் புதுமையினர் (LGBTQ+) மற்றும் புலம்பெயர்ந்தோருக்குக் கருணை காட்ட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பேராயர் மரியன் எட்கர் புடே முன்வைத்த வேண்டுகோள், கிறிஸ்தவ தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, பல முற்போக்கு கிறிஸ்தவர்களால் கருதப்படுகின்றது.

ஆனால், பழமைவாத கிறிஸ்தவர்கள் சிலர், மரியன் எட்கர் புடேவின் வார்த்தைகள் “பொருத்தமற்றதாகவும் சங்கடமானதாகவும்” கருதுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, ட்ரூத் சோஷியல் எனும் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புடேவை விமர்சித்தார்.

அவரை “தீவிர இடதுசாரி. கடுமையான டிரம்ப் வெறுப்பாளர்” என்றும் தெரிவித்த டிரம்ப், புடே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

வாஷிங்டனின் எபிஸ்கோபல் தேவாலயத்தின் பேராயர் மரியன் எட்கர் புடே, 15 நிமிட பிரசங்கத்தில் ஆவணங்களின்றி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பால் புதுமையினர் அவர்களின் எதிர்காலம் குறித்து எதிர்கொள்ளும் அச்சங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் குறித்துப் பேசினார்.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிஷப் மரியன் எட்கர் புடேவின் பேச்சால் ஈர்க்கப்படாதவாறு அதிபர் டிரம்ப் காணப்பட்டார். பின்னர், “இது ஒரு சிறந்த பிரசங்கம் என்று நான் நினைக்கவில்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்

அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றுள் ஒரு உத்தரவு, ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.

கூடுதலாக, அமெரிக்க எல்லையில் சட்டவிரோத இடப்பெயர்வு மற்றும் புகலிட கோரிக்கைகளை கணிசமாக குறைக்க புதிய நடவடிக்கைகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

65 வயதாகும் பிஷப் மரியன் எட்கர் புடே, வாஷிங்டன் டிசி மற்றும் மேரிலாந்தில் உள்ள நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொலம்பியா மாவட்டத்தில் உள்ள 86 எபிஸ்கோபல் சபைகளுக்கு தலைவராகப் பணியாற்றுகிறார்.

தலைவர் பதவியில் பொறுப்பேற்றுள்ள முதல் பெண்மணியான இவர், வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலின் பிற செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மறைமாவட்டத்தின் ஒன்பதாவது பேராயராக, புடே பதவியேற்ற சிறிது காலத்துக்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சார்பாக எடுக்கப்பட்ட நேர்காணலில், அவரை “மிகவும் வெளிப்படையான தாராளவாதி” என்று விவரித்தது.

அந்த நேர்காணலில், தன்பாலின திருமணத்தை ஆதரிப்பது “மிகவும் தெளிவான மற்றும் வெளிப்படையான முடிவு” என்று புடே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது முற்போக்கான கருத்துக்கள் ஜனநாயக தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

மரியன் எட்கர் புடே, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பால் புதுமையினர் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது கருணை காட்டுமாறு மரியன் எட்கர் புடே அதிபர் டிரம்பிடம் கோரிக்கை வைத்தார்

எபிஸ்கோபல் தேவாலயம் உலகளாவிய ஆங்கிலிகன் கம்யூனியனின் தாராளவாத கிளைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், உலகளவில் மிகப்பெரிய கிறிஸ்தவ பிரிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எபிஸ்கோபல் தேவாலய வலைதளத்தின் படி, “ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுளின் அன்பைச் சொல்லவும், எடுத்துக்காட்டவும் அந்த தேவாலயம் விரும்புகிறது” என குறிப்பிட்டுள்ளது.

மேலும், “அனைத்து பாலினங்களையும் பாலியல் சார்புகளையும் உள்ளடக்கியவர்கள்” பேராயர்கள், பாதிரியார்கள் மற்றும் டீக்கன்களாகப் (பாதிரியார்களின் சில வேலைகளை செய்யும் இறை பணியாளர்கள்) பணியாற்றுகிறார்கள் என்று விவரிக்கிறது.

அது மட்டுமின்றி, தனது தேவாலய இணையதளத்தில்,”இன சமத்துவம், துப்பாக்கி வன்முறையைத் தடுப்பது, குடியேற்றச் சீர்திருத்தம் மற்றும் பால் புதுமையின மக்களை முழுமையாக உள்ளடக்குவது போன்றவற்றை ஆதரிப்பதாக” பேராயர் மரியன் எட்கர் படே குறிப்பிடுகிறார்.

அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் எட்கர் ஒரு வழக்கறிஞராகவும் அமைப்பாளராகவும் அறியப்படுகிறார்.

பல பழமைவாத கிறிஸ்தவர்களின், குறிப்பாக டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் சுவிசேஷ விசுவாசிகளின் கருத்துக்களிலிருந்து, மிகவும் வேறுபட்ட பார்வை இது.

பால் புதுமையின மக்களின் உரிமைகளை அதிகரிப்பது பைபிளின் போதனைகளுக்கு எதிரானது என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தக் கண்ணோட்டம் ஏற்கனவே சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் மற்றும் செயல்களில் செல்வாக்கு செலுத்துவதையும் காண முடிகிறது.

அது மட்டுமின்றி குடியேற்றம், அமெரிக்காவை பாதுகாப்பற்றதாக மாற்றும் எனவும் பழமைவாத கிறிஸ்தவர்கள் சிலர் கவலைப்படுகிறார்கள். மேலும், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் கொள்கைகள் மனித கடத்தலை ஊக்குவிப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், குடியேற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்சிகோவில் இருந்து குடியேறுபவர்களை தடுக்கும் வகையில் எல்லைப் பகுதியில் அவசர நிலையை டிரம்ப் அறிவித்துள்ளார்

டொனால்ட் டிரம்புடன் புடே மோதுவது இது முதல் முறையல்ல.

2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் ஜார்ஜ் ஃபிலாய்ட் போராட்டம் நடந்தபோது, வாஷிங்டன் டிசியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு வெளியே டிரம்ப் பைபிளுடன் புகைப்படம் எடுத்ததற்காக, இதற்கு முன்பு அவர் அதிபராக இருந்தபோது புடே விமர்சித்தார்.

ஒரு நேர்காணலில், “அவர் பேசியது மற்றும் செய்தது அனைத்தும் வன்முறையைத் தூண்டுவதாகும். எங்களுக்கு தார்மீக தலைமை தேவை, அவர் எங்களை பிளவுபடுத்த எல்லாவற்றையும் செய்தார்” என்று புடே குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர் என்றால் யார் என்பதை விளக்குவதில், அமெரிக்காவில் நிலவும் மிகப்பெரிய குழப்பத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

இயேசுவைப் போல வாழ்வது என்பது, மற்றவர்களை ஏற்றுக்கொண்டு சமூக நீதிக்காகப் போராடுவது என்று முற்போக்காளர்கள் வாதிடுகின்றனர்.

மறுபுறம், மக்கள் கடவுளின் வார்த்தையைப் பின்பற்றாததால், நாடு தார்மீக வீழ்ச்சியில் இருப்பதாக, பழமைவாதிகள் பலர் நினைக்கிறார்கள்.

இவர்களிடையே நிலவும் மோதல் தேர்தல் சமயத்தில் தெளிவாகத் தெரிந்தது.

ஃபிராங்க்ளின் கிரஹாம் போன்ற சுவிசேஷ தலைவர்கள், “கிறிஸ்தவர்களுக்கு, சுவிசேஷகர்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி” என டிரம்பின் வெற்றியை குறிப்பிட்டனர்.

செவ்வாய் கிழமை வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளில் இதனை நன்றாகக் காணலாம். எபிஸ்கோபல் தேவாலயம் புலம்பெயர்ந்தோருக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.

“அடக்குமுறையிலிருந்து தப்பிக்க, கடவுளால் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்களின் விவிலியக் கதையால், கிறிஸ்தவர்களாக எங்களது நம்பிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியது.

மறுபுறம், “இந்தப் பிரசங்கத்தை வழங்குபவர் நாடு கடத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்” என்று குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் காலின்ஸ், எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் புடே குறித்து கருத்து தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு