டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் நெருங்க முயல்கிறாரா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் நெருங்க முயல்கிறாரா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார்.

இந்தியாவில் சமூக ஊடகங்களில் ஜெய்சங்கரின் படத்தைப் பகிரும்போது, ​​டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டதாகப் பலரும் எழுதி வந்தனர்.

​​ஜனவரி 21 அன்று டிரம்பின் பதவியேற்பு விழாவின் படத்தைப் பகிர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முன் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டதாக இந்தியா டுடே நாளிதழ் பதிவிட்டிருந்தது.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆங்கில நாளிதழான தி இந்துவின் தூதரக விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “டிரம்பின் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் ஜெய்சங்கருக்கு இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் குவாட் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர்களுக்கு ஜெய்சங்கர் அமர்ந்திருந்த இடத்துக்கு ஒரு சில வரிசைகள் பின்னால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது “என்று குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அமெரிக்காவின் டெலவேர் பல்கலைக்கழக பேராசிரியர் முக்தார் கான், ஜெய்சங்கரின் புகைப்படத்தைக் காணொளியாகத் தயாரித்துள்ளார். அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முதல் வரிசையில் அல்லாமல் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருப்பதாகக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து முக்தர் கான் கூறுகையில், “பதவியேற்பு விழாவுக்கு நரேந்திர மோதியை டொனால்ட் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை. டிரம்ப் பதவியேற்றதும் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, ஜெய்சங்கர் மூலம் கடிதமும் அனுப்பினார். ஆனால் டிரம்ப் நரேந்திர மோதியை அழைக்கவில்லை. டிரம்ப், தானாகவே சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அழைத்து, சீனாவுக்கு எதிராக வரி விதிக்கப் போவதாக மிரட்டினார், ஆனால் அவர் இன்னும் வரி விதிக்கவில்லை” என்று விளக்கினார்.

பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கருக்கு எங்கே இடம் கிடைத்தது?

அதுகுறித்து விரிவாகப் பேசிய முக்தாதர் கான் “டிரம்ப் பதவியேற்பு விழாவில் டாக்டர் ஜெய்சங்கர் மூன்றாவது வரிசையில் இருந்தார். டிரம்பின் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்பதைப் பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. ஜெய்சங்கரைவிட முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டது அதிக கவனம் பெற்றது” என்றார்.

அது மட்டுமின்றி, “ஜெய்சங்கர் டொனால்ட் டிரம்பை சந்தித்தது நல்லதுதான். மேலும் ஜெய்சங்கர் வெளியிட்ட படத்தில், காஷ் படேல் மற்றும் விவேக் ராமசாமி அவருடன் உள்ளனர். பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை இந்தியா பெற்றதால், ஜெய்சங்கரை அனுப்ப முடிவு செய்தது. மறுபுறம், டிரம்ப் சீனாவுடனான உறவை மேம்படுத்த முயல்கிறார்” என்றும் குறிப்பிடுகிறார் பேராசிரியர் முக்தாதர்.

ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் குறித்து இஸ்லாமாபாத்தை சேர்ந்த சனோபார் நிறுவனத்தின் செயல் இயக்குநர் கமர் சீமா பல விஷயங்களைக் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் நெருங்க முயல்கிறாரா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், @DrSJaishankar

படக்குறிப்பு, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்புக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை.

“குவாட் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த பிறகும் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. மாறாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்,” என்று தகவலளித்தார் கமர் சீமா.

கமர் சீமா மேலும் கூறுகையில், “மார்கோ ரூபியோவுக்கும் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. முதலாவதாக, இருவருக்கும் அதில் உடன்பாடு இல்லை என்பதை இதன் பொருளாகக் கொள்ளலாம்.

அடுத்ததாக, முக்கியமான விஷயம் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு என்பதால் அவர்கள் இருவரும் ஊடகங்களிடம் பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஒருவேளை, மார்கோ ரூபியோ அல்லது ஜெய்சங்கர் என இருவரில் யாரவது ஒருவருக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருக்க வேண்டும்” என்று விவரித்தார்.

மேலும் பேசிய சீமா, “எனது கணிப்பின்படி, ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவுடன் மகிழ்ச்சியாகத் தென்படவில்லை. ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவுடன் கைகுலுக்க முயற்சி செய்தார். ஆனால், மார்கோ ரூபியோவின் உடல்மொழி நேர்மறையாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மேலும் ஜெய்சங்கரும் இயல்பாகத் தெரியவில்லை. ஒருவேளை எனது கணிப்பு தவறாகக்கூட இருக்கலாம்” என்றார்.

சமூக ஊடகங்களில், எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மார்கோ ரூபியோவின் சந்திப்பு தொடர்பான காணொளி பகிரப்படுகிறது, அதில் ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவுடன் கைகுலுக்க முயற்சி செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மறுபுறம், பதவியேற்ற பிறகு, டிரம்ப் சீனாவை நேரடியாக எதிர்ப்பதைவிட, அவர்களுடன் உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகப் பல அறிகுறிகளை வெளிப்படுத்தினார்.

டிரம்ப் சீனாவுடன் நெருங்கி வருகிறாரா?

டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் நெருங்க முயல்கிறாரா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், @MEAIndia

படக்குறிப்பு, அமெரிக்காவில், குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்

பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு ஷி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் டிரம்பிடம் இருந்து அப்படியான அழைப்பு இந்தியாவுக்கு வரவில்லை.

அமெரிக்க நாளிதளான வால் ஸ்ட்ரீடின் செய்திப்படி, டிரம்ப் தனது அதிகாரிகளிடம் 100 நாட்களுக்குள் சீனாவுக்கு செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார். மறுபுறம் சீனாவுக்கு சொந்தமான டிக் டாக் செயலியைத் தடை செய்யும் முடிவையும் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.

இப்படியான நிலையில், டிரம்ப் அதிபரான பிறகு, சீனா மீதான அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க்கின் கருத்துப்படி, டிரம்பின் சவால்களைச் சமாளிக்க இந்திய அரசு தயாராகி வருகிறது.

மேலும் இந்தியாவுடன் வரி விதிப்புக் கொள்கைகளில் டிரம்ப் பிடிவாதமாக இருந்தால், மோதி அரசு வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தயாராகும் என்றும் ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவில் டிரம்பின் வெற்றியைக் கண்டு அஞ்சும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இல்லை என்று ஜெய்சங்கர் கூறியிருந்தார். ஆனால் அதுகுறித்து டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்தவித உத்தரவாதமும் கிடைக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, இந்தியாவின் வர்த்தக உபரியைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு 35.3 பில்லியன் டாலராக இருந்தது. அதாவது, இந்தியா 35 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு இந்தியா விற்றுள்ளது. மறுபுறம், அமெரிக்கா, இந்தியா இடையே வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதை டிரம்பும் விரும்பவில்லை.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கலாம், அதே நேரத்தில் இறக்குமதியை அதிகரிக்கலாம் என்று ப்ளூம்பெர்க் சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் நெருங்க முயல்கிறாரா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

மேலும் “அமெரிக்காவைவிட இந்தியாவால் அதிக மது , எஃகு மற்றும் எண்ணெய் வாங்க முடியும். இது தவிர, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்கலாம். டிரம்ப் நிர்வாகத்துடன் இந்தியா மோதும் மனநிலையில் இல்லை.

அது மட்டுமின்றி, அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய 18 ஆயிரம் பேரை இந்தியா திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களின் விவகாரத்தையும் மார்கோ ரூபியோ ஜெய்சங்கரிடம் எழுப்பியுள்ளார்,” என்று ப்ளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியா பாதிக்கப்படுமா?

இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் முன்வைத்துள்ள வரி சார்ந்த அச்சுறுத்தல் குறித்து, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.

“டிரம்ப் இந்தியா மீது வரி விதித்தால், அது அமெரிக்காவின் பொருளாதார மிரட்டலாக இருக்கும். அமெரிக்காவின் பொருளாதாரம் இந்தியாவைவிட பன்மடங்கு பெரியது. அமெரிக்காவின் பொருளாதாரம் 29 டிரில்லியன் டாலர்கள், இந்தியாவின் பொருளாதாரம் நான்கு டிரில்லியன் டாலர்கள் மட்டுமே.

மறுபுறம், அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 66 ஆயிரம் டாலர்கள். இந்தியாவில் அது 2,400 டாலர்கள் மட்டுமே. உலகப் பொருளாதார அமைப்பை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. சர்வதேச வர்த்தகம் டாலரில் நடைபெறுவதால், அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிக்கிறது” என்று கன்வால் சிபல் விவரிக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் நெருங்க முயல்கிறாரா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், @MEAIndia

படக்குறிப்பு, குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ

மேலும், “அமெரிக்காவின் கொள்கைகள் உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவை இந்தியாவுடன் ஒப்பிட முடியாது. போட்டி என்பது சமநிலையில் இருக்க வேண்டும். முக்கியமாக, அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை சீனாவுடன்தான் உள்ளது.

சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 30 சதவீதமாகவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் 16 சதவீதமாகவும், கனடாவுடன் 15 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை வெறும் 3.2 சதவீதம் மட்டுமே. அதன் அடிப்படையில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது” என்றும் கன்வால் சிபல் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், 2022ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 191.8 பில்லியன் டாலர். இந்தியா 118 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதியும், 73 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதியும் செய்துள்ளது.

அதாவது 2022இல் இந்தியாவின் வர்த்தக உபரி, 45.7 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் ‘முதலில் அமெரிக்கா’ என்ற கொள்கையின் கீழ், டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தால் நிலைமை மாற வாய்ப்புள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு