எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.
”புதிய நடைமுறைக்கு அமைய, ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியில் சிம் அட்டையை உட்செலுத்தும்போது, அந்த கையடக்கத் தொலைபேசி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாததாக இருந்தால், அந்த தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று கிடைக்கப் பெறும்.”
”இந்த குறுந்தகவல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நாட்டில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளன. அதனால், கையடக்கத் தொலைபேசிகள் சட்டரீதியானதாகக் காணப்படுகின்றமையானது, பயன்பாட்டாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்” என அவர் கூறுகிறார்.
பரிசாக கிடைக்கும் செல்போன்களை என்ன செய்வது?
நாட்டிலுள்ள நபர் ஒருவருக்கு பரிசாக அல்லது வெளிநாட்டிலிருந்து மீண்டும் வருகை தரும் ஒருவர் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்தல் அத்தியாவசியமானது என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கின்றார்.
”இலங்கையிலுள்ள உறவினர் ஒருவருக்குப் பரிசு வழங்குவதற்கு அல்லது தமது பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகளை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்த பற்றுச்சீட்டு அல்லது அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் இருக்குமானால் அந்த கையடக்கத் தொலைபேசியை எந்தவித தடையும் இன்றி பதிவு செய்துகொள்ள முடியும்” என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் வர்த்தகர்கள் தமது வர்த்தக அபிலாஷைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சட்டம் அமலாகுமா?
இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் தமது தனிப்பட்ட பாவனைக்காக கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகளைப் பதிவு செய்ய வேண்டுமா என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் வினவினோம்.
”இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வருகின்ற கையடக்கத் தொலைபேசிகள் சுங்கப் பிரிவில் பதிவாகும். அந்த வெளிநாட்டு பிரஜைகள் அவர்களது தொலைபேசிகளுக்காக சிம் அட்டையை தமது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) பயன்படுத்தி கொள்வனவு செய்வார்கள். அந்த சிம் அட்டையை வாங்கும்போது, தொலைபேசியின் IMEI இலக்கம் பதிவு செய்யப்படும்.”
”அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சிம் அட்டையானது, வெளிநாட்டு பிரஜை நாட்டைவிட்டு வெளியேறும்போது பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வெளிநாட்டு பிரஜை தனது தொலைபேசியை இலங்கையிலுள்ள ஒருவருக்கு பரிசாக வழங்குவாராக இருந்தால், அவர் புதிய சிம் அட்டையை உட்செலுத்த வேண்டும். அப்போது அந்த தொலைபேசிக்கு பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசி என்ற குறுந்தகவல் கிடைக்கும். தொலைபேசியை பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படும்” என்று அவர் குறிப்பிடுகின்றார்.
குறைந்த விலையில் செல்போன்களை வாங்க முடியாதா?
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்களை விடவும், பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்யும் முகவர்கள் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்து வருவதை சந்தையில் காண முடிகின்றது.
இந்த நிலையில், புதிய சட்டத்தின் பிரகாரம், இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு வரும்போது முன்னெடுக்கப்படுகின்ற பதிவு நடவடிக்கைகள் காரணமாக, மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இல்லாது போகுமா என அவரிடம் வினவினோம்.
”குறைந்த விலைக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பம் இந்தப் புதிய நடைமுறையின் ஊடாக இல்லாது போகின்றது எனச் சிலரால் கூற முடியும். எனினும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டிக்கரை காண்பித்து இன்றும் அதிக விலையில் கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுகின்றன.”
”எனினும், நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்ற அனைத்து கையடக்கத் தொலைபேசிகளையும் பதிவு செய்து, பயன்பாட்டாளர்களுக்கு எந்தவொரு இடத்திலும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கவே நாங்கள் முயல்கின்றோம்.’
”ஒரே ரகமான கையடக்கத் தொலைபேசிகள் பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதை நாங்கள் காண்கின்றோம். குளிரூட்டப்பட்ட விற்பனை நிலைகளிலும், சாதாரண விற்பனை நிலையங்களிலும் இரண்டு விதமான விலைகளைச் சொல்ல முடியாத நிலை ஏற்படும். விற்பனையாளர்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற போட்டித் தன்மை காரணமாக, பொது மக்களுக்குக் குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.”
”பாரியளவிலான கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் அதிகளவான லாபம் ஈட்டுகின்றன. பாரியளவிலான தொலைபேசிகளை இறக்குமதி செய்யும்போது கிடைக்கின்ற சலுகைகளின் பிரகாரம் அதிக லாபத்தைப் பெறுகின்றனர். எனினும், அந்தச் சலுகை பொது மக்களுக்கு கிடைப்பதில்லை” என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவிக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு