அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.க்கு சபையில் உரையாற்றுவதற்கு நேரம் வழங்காதமை ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் அது எதிர்க்கட்சியின் தவறு என்றும் அதற்காக முழு பாராளுமன்றமும் வெட்கப்பட வேண்டும் என்றும் சபை முதல்வர் ‘அமைச்சர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அர்ச்சுனா எம்.பி முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுப்பது சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சியின் பொறுப்பாகும் என தெரிவித்த அமைச்சர், அர்ச்சுனா எம்.பி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பது பொருத்தமாகாது என்றும் அவருக்கான நேரம் வழங்கப்படாதமை ஜனநாயக விரோத செயற்பாடாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அர்ச்சுனா எம்பி முன்வைத்த சிறப்புரிமை பிரச்சினையையடுத்து, அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவுமே அவருக்கான நேரம் ஒதுக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர்,அது அரசாங்கத்தின் விடயமல்ல என்றும் தயவு செய்து எதிர்க்கட்சிக்கு ஒதுக்கும் நேரத்தில் அவருக்கும் நேரத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த விடயம் பாராளுமன்றம் வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதுடன் . அவரது சிறப்புரிமை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்றத்தை நடத்திச் செல்வதிலும் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
அர்ச்சுனா எம்.பியின் நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பாக அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்களுடன் அரசாங்கத்திற்கு எத்தகைய தொடர்பும் கிடையாது. அது சட்ட ரீதியான விடயமாகும். எனினும் அவரை கைது செய்ய வேண்டுமாயின் சபாநாயகருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டும்.எவர் தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்பதை உணர வேண்டும்.
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் எமது அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. தயவு செய்து எவரும் இன ரீதியான வகையில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம்.
இதன்போது மீண்டும் எழுந்த அர்ச்சுனா ராமநாதன் எம்.பி
இது வரையில் எனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை எதுவும் தனிப்பட்ட வழக்குகள் அல்ல.ஊழல்கள் தொடர்பில் எவ்வளவோ தகவல்கள் உள்ளன.மன்னார் வைத்தியசாலையில் கொலை செய்கின்றனர். நான் எம்.பியாக வருவதற்கு முன்னர் டாக்டராகவே பதவி வகித்தேன். அப்போது எனக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. நான் இப்போது வடக்கை பிரதிநிதிததுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவேன்.
என்னை ஏன் புலி, புலி என்று கூறி கஷ்டப்படுத்துகின்றீர்கள். நான் புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். அல்லது சுட்டுக் கொல்லுங்கள்.
எமது மக்கள் இலட்சக் கணக்கில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டுள்ளனர். இன்று எனக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. வீதியில் தனியாகவே செல்கின்றேன். என்னை எவரும் கொலை செய்தால் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வேளையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக;
எதிர்க்கட்சியில் உள்ள சகல கட்சிகளுக்கும் நியாயமான நேரத்தை ஒதுக்குவதற்காக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
அர்ச்சுனா எம்.பி தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினையொன்று ஏற்பட்டது. எதிர்க்கட்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் எமது எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ஏற்பட்ட அந்த பிரச்சினை தொடர்பில் நாம், சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். அது தொடர்பில் பதிலை வழங்குமாறும் கோரியுள்ளோம். இந்நிலையில் அர்ச்சுனா எம்.பி இன்று முதல் அரசாங்கத்திற்கு எவ்வித ஆதரவும் வழங்குவதில்லை என்று கூறியுள்ளார். அதன்படி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பியாக இப்போது அவர் காணப்படுவதால் எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வந்ததைப் போன்று தீர்மானம் எடுக்கப்படும்.