அதானி குழுமம் தனது இலங்கை மின்சக்தி ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது.
அதன்படி, மன்னார் மற்றும் பூனேரியில் அதானியின் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று துறைமுகங்கள் முதல் மின்சாரம் வரையிலான கூட்டுத்தாபனத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாக கூறுகிறோம்.
2024 மே மாதம் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறுமதிப்பீடு செய்வதற்கான இலங்கை அமைச்சரவையின் 2025 ஜனவரி 2 ஆம் திகதி முடிவு, ஒரு நிலையான மதிப்பாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
குறிப்பாக புதிய அரசாங்கத்துடன், விதிமுறைகள் அவற்றின் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் ஆற்றல் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையின் பசுமை ஆற்றல் துறையில் $1 பில்லியன் முதலீடு செய்வதில் அதானி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்துள்ளது என்று வெள்ளிக்கிழமை இலங்கையின் எரிசக்தி அமைச்சின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி Agence France Press (AFP) செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அதானி குழுமத்தின் மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.