ரஷ்யாவுக்கு ‘அன்பு’ கலந்த எச்சரிக்கை விடுத்த டிரம்ப் – யுக்ரேன் எதிர்பார்ப்பது என்ன?

போரை நிறுத்த வேண்டும்  - புதினை எச்சரிக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், EPA

  • எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட், ராபர்ட் கிரீனால்
  • பதவி, பிபிசி நியூஸ்

யுக்ரேனில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் கருத்து பதிவிட்டிருந்த டிரம்ப், போரை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுப்பதால் ரஷ்யாவுக்கும் அதன் அதிபருக்கும் தான் “ஒரு பெரிய உதவி” செய்வதாக தெரிவித்திருந்தார்.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய முழு வீச்சிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை ஒரே நாளில் எடுப்பேன் என டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதற்கு ரஷ்யா எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனினும் புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் ஒத்துழைக்க ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் சமீப நாட்களில் தெரிவித்துள்ளனர்.

2014ம் ஆண்டு முதலில் தொடங்கிய போரை நிறுத்தும் நோக்கிலான பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக புதின் பல முறை தெரிவித்துள்ளார்.

ஆனால் யுக்ரேனின் நிலபரப்பில் ரஷ்யா கைப்பற்றிய 20% நிலத்தை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும் என்று உண்மை நிலவரத்தை யுக்ரேன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். மேலும் யுக்ரேன், நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர்வதையும் அவர் எதிர்க்கிறார்.

யுக்ரேன் தனது நிலங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. எனினும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் சிலவற்றை தற்காலிகமாக விட்டு கொடுக்க வேண்டியிருக்கும் என்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா யுக்ரேன் போர் உருவாகியிருக்காது” – டிரம்ப்

செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “மிக விரைவில்” ரஷ்ய அதிபரை சந்திக்க போவதாக தெரிவித்தார். மேலும் புதின் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை என்றால், ரஷ்யா மீது பொருளாதார கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு “வாய்ப்புகள் அதிகம்” என்று தெரிவித்தார்.

தனது ட்ரூத் சோசியலில் பதிவில் அவர் மேலும் சிலவற்றை கூறினார். “பொருளாதாரத்தில் மங்கி கிடக்கும் ரஷ்யா மற்றும் அதன் அதிபர் புதினுக்கு நான் மிகப்பெரிய உதவியை செய்யப் போகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

“இப்போதே இந்த அபத்தனமான போரை நிறுத்துங்கள். இது இன்னும் மோசமடைய தான் போகிறது. விரைவில் ஒரு ‘ஒப்பந்தம்’ போட வேண்டும். இல்லை என்றால் அமெரிக்காவில் ரஷ்யாவால் விற்கப்படும் எல்லாவற்றுக்கு அதிகபடியான வரி, கட்டணம், பொருளாதார தடைகள் விதிப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை” என்றும் தெரிவித்திருந்தார்.

“நான் அதிபராக இருந்திருந்தால் உருவாகிருக்காத இந்த போரை உடனே நிறுத்துவோம். நாம் இதை எளிதாகவும் முடிக்கலாம், கடுமையான வழிகளாலும் முடிக்கலாம். எளிமையான வழியில் முடிப்பதே எப்போதும் நல்லது. ஒரு ஒப்பந்தத்தை போடுவதற்கான நேரம் இது” என்றும் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.

போரை நிறுத்த வேண்டும்  - புதினை எச்சரிக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, போர் முனையில் யுக்ரேன் வீரர்கள்

வலியுறுத்தும் அமெரிக்கா

ஒப்பந்தத்தை போடுவதற்கு முன்பாக, அந்த ஒப்பந்தம் குறித்த டிரம்பின் எதிர்ப்பார்ப்புகள் என்னவென்று அறிந்து கொள்ள ரஷ்யா விரும்புகிறது என ரஷ்யாவின் ஐக்கிய நாடுகள் துணை தூதர் திமித்ரி பொல்யான்ஸ்கி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்திருந்தார்

எப்படியான ஒப்பந்தமாக இருந்தாலும், குறைந்தது இரண்டு லட்சம் அமைதி காவலர்கள் தேவைப்படுவார்கள் என யுக்ரேன் அதிபர், உலக பொருளாதார மன்றத்தின் முன்பு செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

அமைதி காவல் படையில் அமெரிக்க துருப்புகளை கண்டிப்பாக இருந்தால் தான் ரஷ்யாவை தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் ப்ளூம்பர்க் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

“அமெரிக்கா இல்லாமல் இருக்க முடியாது. சில ஐரோப்பிய நண்பர்கள் அமெரிக்கா இல்லாமலும் சாத்தியம் என்று நினைக்கலாம். ஆனால் அது முடியாது” என்று கூறிய அவர், ”அமெரிக்கா இல்லாமல் வேறு எவரும் இத்தகைய நடவடிக்கையில் இறங்க தயாராக இருக்க மாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

இப்படி கடுமையாக பேசும் டிரம்பை யுக்ரேன் தலைவர்கள் பாராட்டலாம். ஆனால் ரஷ்யாவுக்கு எதிராக வலுவான செயல்கள் வேண்டும், வார்த்தைகள் போதாது என்பதே யுக்ரேனின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

டிரம்ப் கூறும் பொருளாதார தடைகள், அதிகபடியான வரி எப்போது எங்கே விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு கூறவில்லை. அமெரிக்காவுக்கான ரஷ்ய ஏற்றுமதிகள் 2022ம் ஆண்டு முதல் சரிய தொடங்கின. ஏற்கெனவே பல வித கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

தற்போது பாஸ்பேட் கொண்ட உரங்களும் பிளாடினமும்தான் அமெரிக்காவுக்கு ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஆகும்.

போரை நிறுத்த வேண்டும்  - புதினை எச்சரிக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், Jose Colon/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஜனவரி 21ம் தேதி, யுக்ரேன் ராணுவ வீரர்கள் போர் யுக்ரேன் எல்லைக்குள் பயிற்சி மேற்கொண்டனர்.

சமூக வலைதளங்களில் யுக்ரேனியர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதிகபடியான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று கூறுவது, ரஷ்யாவுக்கு எதிரான மிக பலவீனமான எதிர்வினை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பெரும்பாலான யுக்ரேனியர்களுக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், அமைதி பேச்சுவார்த்தைகளின் போது புதின் என்னென்ன விசயங்களை விவாதிக்க தயாராக இருக்கிறார் என்பதே.

யுக்ரேனின் தெற்கு எல்லையில் இருக்கும் நகரான ஒடெஸா வரை ரஷ்யா டாங்கிகள் ஓடி செல்லும், அப்படி ஒரு வெற்றி ரஷ்யாவுக்கு கிடைக்கும் என்பது எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றியைவிட சற்று குறைவானதே கிடைக்கப் போகிறது என்று ரஷ்யர்களை அந்நாட்டு அரசு தயார்படுத்தி வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

புதினின் தீவிர ஆதரவாளரான தொலைக்காட்சி ஆசிரியர் மார்கரிடா சிமோன்யன், போரை நிறுத்துவதற்கான யதார்த்தமான நிலைமைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளார். தற்போது உள்ள போர்முனையில் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுக்ரேனின் நான்கு பகுதிகளை ரஷ்யாவுக்கு உட்பட்டது என்று சட்டவிரோதமாக புதின் அறிவித்தார். அந்த பகுதிகளின் மீது யுக்ரேன் ஓரளவு கட்டுப்பாடு கொண்டுள்ளது. போரை நிறுத்துவது என்றால், இதே நிலை தொடரும் என்று அர்த்தம்.

போரை நிறுத்த வேண்டும்  - புதினை எச்சரிக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், TETIANA DZHAFAROVA/AFP via Getty Images

படக்குறிப்பு, ஜனவரி 22ம் தேதி யுக்ரேன் தலைநகரில் கிவ்-ல் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் பதுங்கி உள்ளனர்.

ஆனால் ரஷ்யாவில் உள்ள தீவிர எண்ணம் கொண்டவர்கள் “இந்த தோல்வியை” ஏற்க மறுக்கின்றனர்.

தனது சமூக ஊடகப் பதிவில், டிரம்ப் ரஷ்யாவுக்கு எதிராக விடுத்த எச்சரிக்கைகளை ‘அன்பு’ கலந்த வார்த்தைகளால் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் சந்தித்த இழப்புகளுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார். புதினுக்கு மிகவும் புனிதமான விவகாரம் இது.

எனினும் சோவியத் ரஷ்யா என்பது ரஷ்யா மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டு போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தி கூறியிருந்தார் டிரம்ப். உண்மையில் லட்சக்கணக்கான யுக்ரேனியர்கள் மற்றும் பிற சோவியத் குடிமக்கள் தங்கள் உயிர்களை இழந்திருந்தனர்.

எனினும், யுக்ரேன் நேட்டோ அமைப்பில் சேரக் கூடாது என்று ரஷ்யா கூறிய போது அதை புரிந்து கொள்வதாக கூறிய டிரம்ப், தற்போது தனது நிலைபாட்டை மாற்றுவதாக தெரிகிறது.

டிரம்பின் நிலைபாடு முக்கியமானது. ஆனால் 11 ஆண்டுகளாக ரஷ்யாவுடனான போர், அமைதி பேச்சுவார்த்தைகளின் தோல்வி, ஆகிய காரணங்களால் யுக்ரேனியர்கள் தங்கள் நிலைமை மாறும் என்று நம்பிக்கை கொள்ளவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு