மு.க. ஸ்டாலின், இரும்பு காலம்

பட மூலாதாரம், MK Stalin / DIPR

இந்தியா மட்டுமல்லாமல் உலகளவிலேயே தமிழகத்தில் இருந்துதான் இரும்புக் காலம் தொடங்கியது என்றும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் இருந்தது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இரும்பின் தொன்மை என்ற ஆய்வு நூல் சென்னையில் இன்று வெளியிடப்பட்டது. இந்த நூலை, புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் முன்னாள் பேராசிரியர் கே. ராஜனும் தமிழ்நாடு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் ஆர். சிவானந்தமும் தொகுத்துள்ளனர்.

இந்த நூலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு, 5,300 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“ஐயாயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே ‘உருக்கு இரும்பு தொழில்நுட்பம்’ தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4,000ஆம் ஆண்டின் முதற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கின்றன.” என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

மேலும், “தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், புனேவில் உள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அமெரிக்க நாட்டின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகம், ஆகியவற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.”

“தேசிய நிறுவனங்களில் OSL பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க காலப் பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியிலிருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டிருக்கின்றன. அதன்படி கி.மு. 3345லேயே, தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி விட்டது என்று தெரிய வருகிறது” என்று கூறினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டில் இரும்பு பயன்பாடு

வடக்கு எகிப்தின் அல்-கெர்சேவில் கிடைத்த இரும்பினால் ஆன மணிகள்தான் உலகிலேயே மிகப் பழமையான இரும்புப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. இவற்றின் காலம் கி.மு. 3,400 முதல் கி.மு. 3,100வரை என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மணிகள் விண்ணிலிருந்து விழுந்த கல்லில் இருந்து செய்யப்பட்டவை.

இரும்பை உருக்கி பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்ட காலத்தில் துவங்கியதாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட இரும்புக்கால ஈமச் சின்னங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆகவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு எப்போது துவங்கியது என்பதை அறிவது தொடர்பான ஆர்வம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட இரும்புக்கால ஈமச் சின்னங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன

பட மூலாதாரம், @TThenarasu

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட இரும்புக்கால ஈமச் சின்னங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன

இந்நிலையில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழ்நமண்டி, மயிலாடும்பாறை, மாங்காடு ஆகிய இடங்களில் கிடைத்த இரும்பு தொல் பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தெரிவிக்கிறது.

முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களின் மீது நடத்தப்பட்ட காலக் கணிப்புப் பரிசோதனைகளின்படி, தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததாக, தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருந்தது.

இன்று நடைபெற்ற இதே விழாவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

காலங்களின் வரலாறு

தொல்லியல் கால வரிசை என்பது உலகின் வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கும் வெவ்வேறு விதத்தில் இருக்கும்.

தெற்காசியாவைப் பொறுத்தவரை பழைய கற்காலம் (கி.மு. 53,000 முதல் கி.மு. 10,000 வரை), இடை கற்காலம் (கி.மு. 10,000 முதல் கி.மு. 6,500 வரை), புதிய கற்காலம் (கி.மு. 6,500 முதல் கி.மு. 4,000 வரை. சில இடங்களில் கி.மு. 2,000வரைகூட இருக்கலாம்), செப்புக் காலம் (கி.மு. 4,000 முதல் கி.மு. 2,000 வரை), வெண்கலக் காலம் (கி.மு. 3,100 முதல் கி.மு. 1,100 வரை), இரும்புக் காலம் (கி.மு. 1,100 முதல் கி.மு. 500 வரை), வரலாற்றுக் காலம் (கி.மு. 500) எனப் பிரிக்கலாம்.

சில சமயங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை மூன்றே காலகட்டமாக, அதாவது கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்றும் பிரிக்கப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு