செல்போனுக்குத் தடை விதித்ததால் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர் – இன்றைய முக்கிய செய்திகள்

செல்போனுக்குத் தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இன்றைய (23/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

கேரளாவில் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என கூறியதற்காக, பள்ளி முதல்வர் முன்னிலையில் ஆசிரியரை கொலை செய்து விடுவேன் என பிளஸ் 1 மாணவர் மிரட்டியதாக, தினத்தந்தி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளியில் செல்போன் கொண்டு போன பிளஸ் 1 மாணவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த ஆசிரியர் அதனை பள்ளி முதல்வரிடம் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் அறைக்கு வரும்படி மாணவருக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர், அந்த மாணவனிடம் “செல்போன் வேண்டுமென்றால் பெற்றோரை அழைத்து வா” என கூறியதாக அச்செய்தியில் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் முதல்வரை நோக்கி கத்தி கூச்சலிட்டதாகவும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மாணவர், ஒரு கட்டத்தில் ஆசிரியரை கொலை செய்து விடுவேன் என்றும் எச்சரித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாணவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாணவருக்கு ஆலோசனை வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவரும் பள்ளி அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை

தங்கம் விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது என்று தினமணி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சவரன் விலை ரூ.60,200 என இருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு தொடக்கத்தில் (ஜன.1) தங்கம் விலை புவனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.57,200-க்கு விற்பனையானது. அதைத் தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த தங்கம் விலை, ஜன. 16-ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.59,120-க்கு விற்பனையானது.

அதன் பின்ர் உயர்ந்த வண்ணம் இருந்த தங்கம் விலை செவ்வாய்க்கிழமை (ஜன. 21) எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.7,450-க்கும், பவுன் ரூ.59,600-க்கும் விற்பனையானது.

புதன்கிழமை வரலாறு காணாத அளவில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7525-க்கும், பவுனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ. 60,200-க்கும் விற்பனையானதாக அச்செய்தி கூறுகிறது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் ரூ. 60,000-ஐ கடந்துள்ளதால் அனைத்துத் தரப்பு மக்களும் அதிா்ச்சி அடைந்துள்ளனர் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் : சிபிஐ விசாரணை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை இனி சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரிக்கவுள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மூன்று முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ மறுபதிவு செய்துள்ளது. சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு சரியே என்று உச்சநீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் 17ம் தேதி வழங்கிய உத்தரவில் தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி கள்ளச்சாராயம் அருந்திய விவகாரம் முதலில் வெளியே தெரியவந்தது. அடுத்த சில நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது. கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக, கள்ளக்குறிச்சியின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கருணாபுரத்தை சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு காரணமானவர் என்று கண்டறியப்பட்டது. கன்னுக்குட்டி உட்பட 21 பேரை போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

‘தமிழ்நாட்டிலிருந்து பெரியாரை விரட்டுவோம்’: சீமான்

சீமான்

பட மூலாதாரம், X/NTK

தமிழ்நாட்டிலிருந்து பெரியாரை விரட்டுவோம் எனநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீமானின் வீட்டின் முன்பு பல்வேறு பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்த ஒன்று கூடினர். இதன் மூலம் தமிழ் தேசியத்துக்கும் பெரியாரியத்துக்கும் இடையிலான மோதல் மேலும் வலுபெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் புதன்கிழமை அன்று சென்னை நீலாங்கரையில் சீமானின் வீட்டு முன்பு கூடினர். ஆனால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனவே, அவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். பெரியார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததற்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். சீமானின் போஸ்டர்களை கையில் ஏந்தி அவற்றை செருப்பால் அடித்தும் முழக்கங்கள் எழுப்பியும் அவர்கள் போராடினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 878 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அச்செய்தி கூறுகிறது.

அதே வேளை, நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சீமானின் வீட்டு முன்பு பிரியாணி சாப்பிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பெரியார் தமிழர்களின் எதிரி, தமிழ் முட்டாள்தனமான மொழி என்று பெரியார் கூறினார். எனவே, அவரை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம். நான் பிரபாகரனின் (மறைந்த விடுதலை புலிகள் தலைவர்) பாதையை பின்பற்றுகிறேன்” என்று சீமான் தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் – இலங்கை ஜனாதிபதி உறுதி என அமைச்சர் தகவல்

இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்திருப்பதாக, நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார் என்று, வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சட்டத்தை ரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.

அமைச்சர் சுனில் வடகல

பட மூலாதாரம், Sunil Wadagala/Facebook

படக்குறிப்பு, அமைச்சர் சுனில் வடகல

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொலிஸார் இந்த சட்டத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து பேசுகையில் அமைச்சர் சுனில் வடகல இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே, சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வோம் என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு