by sakana1

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் காண்டீபன் இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவால் விசாரணைக்கு முகங்கொடுத்திருந்தார்.

இது தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணை – TIR/20/2023 – 23/1/2025
================================

2025/01/21ஆம் தேதி ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தேன். அன்றைய தினம் விசாரணைக்கு சமூகம் அளிக்க முடியாதற்கான காரணத்தை தெரிவித்து குறித்த விசாரணையை 2025/01/23ஆம் திகதிக்கு மாற்றித் தருமாறு என்னால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு குறித்த விசாரணைக்கு சமூகம் அளித்திருந்தேன்.

Sub Inspector Mr.Dilranga (Division No.1) குறித்த விசாரணையை முன்னெடுத்திருந்த நிலையில் எனது வாக்குமூலத்தை தமிழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிஷாந்தினி பதிவு செய்திருந்தார்.

2023.09.17ம் திகதி தியாகதீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பவனி திருகோணமலை சர்தாபுரத்தில் காடையர்களால் தாக்குதலுக்குள்ளான நிலையில் 16 மாதங்கள் கடந்து குறித்த விசாரணை இடம்பெறுவது தொடர்பில் எனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தேன்.

நான்கு மணித்தியாலங்கள் வரையில் இடம் பெற்ற விசாரணையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கேள்விகளுக்கு எனது பதிலை வழங்கியிருந்ததுடன் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் அரசியலைக் காவிச் செல்ல வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் பணியாகும் எனும் அடிப்படையில் மிகத் தெளிவாக எனது தரப்பு நியாயத்தை பதிவு செய்திருந்தேன்.

“எனது அரசியல் வேணவாவை விடுதலைப் போராட்டமும் திலீபன் அண்ணாவும் காவியும் தாங்கியும் நின்றதாலேயே நான் அதனை ஆதரித்திருந்தேன்.இன்னும் ஆதரிக்கிறேன். இனியும் ஆதரிப்பேன்.” என்பதை நான் பதிவு செய்தேன். என நடராஜா காண்டீபன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்