மனிதர்களைக் காணாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூரியமீன், மீண்டும் புத்துணர்வு பெற உதவிய வினோத உத்தி
- எழுதியவர், கோ ஈவ்
- பதவி, பிபிசி நியூஸ்
ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால்.
இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் ஷிமோனோசெகியில் உள்ள கைக்யோகன் மீன் காட்சியகம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், சூரிய மீன் நீந்தும் பகுதியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீருடைகளுக்கு மனித முகங்களின் முகமூடிகள் இணைக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ‘கடைசி முயற்சி’ என்றும், தனிமையின் காரணமாக மீனுக்கு இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என ஒரு ஊழியர் கண்டறிந்ததாகவும், இந்த மாத தொடக்கத்தில் கைக்யோகன் மீன் காட்சியகம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தது.
பயனளித்த புதிய முயற்சி
ஆனால் இந்த முயற்சி பலனளித்தது. “சூரிய மீன் மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிகிறது!” என அதற்கு அடுத்த நாள் கைக்யோகன் மீன் காட்சியகம் தெரிவித்தது.
கடந்த டிசம்பரில் மறுசீரமைப்பிற்காக இந்த மீன் காட்சியகம் மூடப்பட்டது. அதன் பின்னர், சூரியமீன் தன்னுடைய உணவான ஜெல்லி மீன்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அதன் உடலை தொட்டியில் தேய்க்கத் தொடங்கியது என்று ஜப்பானிய செய்தித்தாளான ‘மைனிச்சி ஷிம்பன்’ திங்களன்று (ஜனவரி 20) செய்தி வெளியிட்டது.
ஒட்டுண்ணிகள் அல்லது செரிமான பிரச்னைகள் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என தொடக்கத்தில் சில ஊழியர்கள் சந்தேகித்தனர். ஆனால், ‘மீனைப் பார்வையிட பார்வையாளர்கள் யாரும் வரவில்லை என்பதால், அது தனிமையை உணர்ந்திருக்கலாம்’ என்று ஒரு ஊழியர் பரிந்துரைத்தார்.
உலகின் ஒவ்வொரு ஆழ்கடலிலும் காணப்படும் இந்த சூரியமீன், ஜப்பானில் ஒரு சுவையான உணவு வகையாகும். அவற்றை தொட்டிகளில் 10 ஆண்டுகள் வரை வளர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அதைப் பராமரிப்பது கடினம் என்பதால், அவை பொதுவாக நீர்வாழ் உயிரினங்களுக்கான காட்சிச்சாலைகளில் காணப்படுவதில்லை.
கைக்யோகன் மீன் காட்சியகத்தில் உள்ள சூரியமீன் சுமார் 80 செ.மீ நீளமும் (31 அங்குலம்), கிட்டத்தட்ட 30 கிலோ எடையும் கொண்டது.
‘மைனிச்சி ஷிம்பன்’ செய்தித்தாளிடம் பேசிய மாய் கடோ எனும் ஊழியர், தனித்துவமான நடத்தை கொண்ட இந்த சூரியமீன் ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார்.
“பார்வையாளர்கள் யாரேனும் தொட்டியை நெருங்கி வந்தால், இந்த மீன் அவர்களை நோக்கி நீந்தும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
சீருடைகளுக்கு மனித முகங்களின் புகைப்படங்களை (முகமூடி) மாட்டி அவற்றை தொட்டிக்கு முன் நிறுத்தியபிறகு, மீனின் உடல்நிலை சற்று தேறியதாகவும், தொட்டியில் சில செய்கைகள் மூலம் அது தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியதாகவும் கைக்யோகன் மீன் காட்சியகம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தது.
இந்த பதிவுக்கு சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. சிலர், இதற்கு முன் அந்த மீன் காட்சியகத்துக்கு சென்றபோது சூரியமீனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
பலரும், இந்த மீன் காட்சியகம் மீண்டும் திறக்கப்படும்போது நிச்சயம் சென்று சூரிய மீனைப் பார்ப்போம் எனக் கூறினர்.
ஜப்பானிய நீர்வாழ் உயிரினங்களுக்கான காட்சிச்சாலை ஒன்று, தங்கள் பராமரிப்பில் இருக்கும் உயிரினங்களை மகிழ்விக்க புதுமையான தீர்வுகளைக் கொண்டு வருவது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்னர், கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது உலகின் பல உயிரியல் பூங்காக்கள், மனிதர்களின் வருகை இல்லாததால் விலங்குகள் தனிமையை உணர்கின்றன என தெரிவித்திருந்தன.
அப்போது, டோக்கியோவின் ஒரு மீன் காட்சியகம் அதன் ஈல் (Eel) மீன்களுக்காக ஒரு ‘அவசர’ வீடியோ அழைப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது. வெகு நாட்களாக, மனிதர்களைப் பார்க்காததால், அந்த ஈல் மீன்கள் ஒருவித சங்கடத்தை உணர்ந்தன என்று மீன் காட்சியக நிர்வாகத்தினர் நம்பினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.