மாலபே பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது மாலபே பகுதியில் சுமார் 11 கிலோ கிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொழும்பு புறநகர் பகுதியான மாலபே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கான்தொட்ட மாவத்தையில் விசேட சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 11 கிலோ 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 180 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் மேற்படி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து கார் ஒன்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கும், 2 இலட்சம் 55 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர் 31 வயதான மல்வானை பகுதியை சேர்ந்தவராவார்.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூரியவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை கைதான நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் தொடர்பில் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.