நாமல் குமாரவிடம் வாக்குமூலம் பெற சி.ஐ.டிக்கு நீதிமன்றம் அனுமதி! சமூக செயற்பாட்டாளரான நாமல் குமாரவிடமிருந்து வாக்குமூலம் பெற்று கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாமல் குமாரவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அழைப்பின் பேரில் நாமல் குமார, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நாமல் குமாரவை சிறைச்சாலையில் வைத்து விசாரணை செய்து அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று கொள்ள அனுமதி வழங்கி கொடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான், நாமல் குமாரவிடமிருந்து வாக்குமூலம் பெற்று கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பில் நாமல் குமார கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.