வயதாக ஆக ஆரோக்கியம் கூடும் அதிசய மீனுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன?

பிக்மௌத் பஃபல்லோ மீன்

பட மூலாதாரம், Alec Lackmann

  • எழுதியவர், ஹன்னா சியோ
  • பதவி, பிபிசி

பிக்மௌத் பஃபல்லோ எனும் வட அமெரிக்காவை சேர்ந்த ஒருவகை மீன் இனம், வயதாக ஆக அதன் ஆரோக்கியமும் அதிகரித்து, நீண்ட காலம் வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அதன் எண்ணிக்கை அழிந்துவருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மே மாதத்தில் நீங்கள் மின்னிசோட்டாவின் ரைஸ் ஏரியில் நின்று பார்த்தால், நெற்பயிர்களுடன் கலந்து, பெரியளவிலான மீன்களின் உடல்கள், நீரின் சில அடி ஆழத்தில் காணக்கிடக்கும்.

அவை, பிக்மௌத் பஃபல்லோ வகை மீன், இவை நன்னீரில் நீண்ட காலம் வாழும் மீன் இனமாகும். இவற்றில் சில, 100 ஆண்டுகள் வரையும் வாழும்.

இந்தசுமார் 23 கிலோ எடை கொண்ட இவ்வகை பெரிய மீன்கள் ஆண்டுதோறும் ரைஸ் ரிவர் ஏரிக்கு இனப்பெருக்கத்துக்காக இடம்பெயரும். ஆனால், தற்போது மீன் இனம் தொடர்பாக சில கவலைகள் எழுந்துள்ளன. அதாவது, சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்ட மீன் குஞ்சுகள், பெரியவையாக வளரவில்லை.

அதிகம் விரும்பப்படாத மீன்

பிக்மௌத் பஃபல்லோ மீன் பல பத்தாண்டுகளாக அதிகம் ஆய்வு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவ்வகை பெரிய மீன்கள் எவ்வளவு தனித்துவமானவை என்பதையும், நம்ப முடியாத வகையில் எப்படி நீண்ட காலத்திற்கு வாழ்கின்றன என்பதையும் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். அவை எப்படி எளிதில் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

இந்த மீன்கள் வட அமெரிக்காவை சேர்ந்தவை. தெற்கு சஸ்கட்சேவன் மற்றும் கனடாவின் மனிடோபா முதல் அமெரிக்காவின் லூய்சியானா மற்றும் டெக்சாஸ் வரை அவற்றைக் காண முடியும். அடிக்கடி மக்களால் காணப்படும் இவ்வகை மீன், அதிக காலம் வாழக்கூடியது, மேலும் மீனவர்களால் அதிகம் விரும்பப்படாத மீனாக உள்ளது. ஏனெனில், வணிக ரீதியாக இவை அதிகம் பிடிக்கப்படாததால், பொருளாதார ரீதியாக அதிக முக்கியத்துவம் இல்லாதவை.

இதனால்தான் இந்த மீன்கள் விஞ்ஞானிகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாதவையாக இருந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் இந்த மீன் குறித்த எதிர்பாராத, புதிய தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மிக பழமையான உயிரினம்

உலகிலேயே அதிக காலம் வாழும் நன்னீர் மீனாக இது அறியப்படுகிறது, சில மீன்கள் 127 வயது வரை கூட வாழ்கின்றன. வயதாகும்போது அதன் ஆரோக்கியம் குறைவதில்லை என தெரிகிறது. இவ்வகை மீன்கள் அதிக காலம் வாழ்வதாலேயே, அவை பெரிதாக வளர முடியாத மீன் குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்தாலும், அதன் எண்ணிக்கை நிலையானதாக உள்ளது என்பதை சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த மீன்களின் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியவில்லையென்றால், சிறிது காலத்திலேயே அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என, ஆய்வாளர்கள் கவலைகொண்டுள்ளனர். இந்த மீன்கள் குறித்து நாம் எந்தளவுக்குக் குறைவாக அறிந்துவைத்துள்ளோம், அவை குறித்து பதிலளிக்கப்படாத கேள்விகள் எத்தனை என்பது இந்த ஆய்வின் வாயிலாக தெளிவாகிறது.

“உலகிலேயே மிக பழமையான விலங்குகளுள் ஒன்று இது. இந்த இனங்களை பாதுகாப்பதற்கான நிர்வாகம் என்று ஒன்று இல்லை,” என டுலுத்தில் உள்ள மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் மீன் ஆராய்ச்சியாளர் அலெக் லக்மன் கூறுகிறார். இவர், இவ்வகை மீன் குறித்தும் அவை வயதாவது குறித்தும் ஆய்வு செய்துள்ள முதன்மை நிபுணராவார்.

பிக்மௌத் பஃபல்லோ

பட மூலாதாரம், Alec Lackmann

படக்குறிப்பு, மின்னிசோட்டா ரைஸ் ஏரியில் உள்ள, இந்த ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான மீன்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு முன்னதாக பிறந்தன

நூறாண்டுகள் வரை வாழ்வது எப்படி?

இந்த மீன்கள் நூறு ஆண்டுகள் வரை வாழ்வது குறித்து முதன்முதலில் கண்டறிந்த, 2019-ல் வெளியான ஆய்வை முன்னின்று நடத்தியவர் இவர். அதற்கு முன்பாக, இந்த மீன்கள் 26 வயது வரைதான் வாழும் என அறியப்பட்டது. வட அமெரிக்காவில் இவ்வகை மீன்களுள் பல, நூறாண்டுகள் வரை வாழ்வதை இவர் உறுதிப்படுத்தினார்.

அலாஸ்கன் ஆர்க்டிக் பகுதியில் மிச்சீக்கள் (ஒருவகை ஈ இனம்) குறித்த முனைவர் பட்ட ஆய்வின் வாயிலாக, லக்மனுக்கு இந்த மீன்கள் குறித்து ஆர்வம் எழுந்துள்ளது. அந்த ஆர்வத்தால் மீன் விலங்கியல் (ichthyology ) குறித்த சில துறைகளில் படித்துள்ளார். அதன்மூலம், பெரும்பாலான மீன் இனங்களின் காதுகளில் காணப்படும் கற்கள் போன்ற ஓட்டோலித் (otolith) அமைப்புகளின் வாயிலாக அவற்றின் வயதை தெரிந்து கொள்வது எப்படி என்பதைக் கண்டறிந்தார்.

இந்த அமைப்புகள், காலம் செல்லச்செல்ல மரங்களில் உள்ளதுபோன்ற வளையங்களை உருவாக்கும். அவற்றை சில துண்டுகளாக பிரித்து, எண்ணி ஆராய்வதன்மூலம், மீன்களின் வயதை துல்லியமாகக் கண்டறிய முடியும்.

மின்னிசோட்டாவுக்கு சென்ற லக்மன், தன்னை சுற்றியுள்ள இத்தகைய மீன்களின் ஓட்டோலித் அமைப்புகளை பிரித்து ஆராயத் தொடங்கியுள்ளார். “நான் முதன்முதலில் ஆராய்ந்த மீன் 90 வயதுடையது,” என்கிறார் அவர். “நான் அதைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். முதலில் அதை நம்புவது கடினமாக இருந்தது.”

இதை கண்டுபிடித்தது, இந்த வித்தியாசமான, அதிகம் அறியப்படாத மீன் குறித்து பல கேள்விகளை கேட்க வழிவகுத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, சில நிபுணர்களுடன் சேர்ந்து இத்தகைய மீன்களுக்கு உள்ள மன சோர்வு மற்றும் வயதாகுதல் குறித்த ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கினார்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் நோயெதிர்ப்பு செல்களின் விகிதங்கள் மற்றும் டெலோமீர்களின் நீளம் (செல்கள் எத்தனை முறை பிரியும் என்பதைக் கட்டுப்படுத்தும் குரோமோசோம்களின் முடிவில் உள்ள ஆர்.டிஎன்ஏ) குறித்து ஆராய்ந்தனர். இவை இரண்டும் உடல் ரீதியாக வயதாவதை குறிக்கும் காரணிகளாக உள்ளன. பின்னர், அவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஓட்டோலித்கள் வளையங்களுடன் ஒப்பிட்டு மீன்களின் உண்மையான வயதை கண்டறிகின்றனர்.

2021ம் ஆண்டில் வெளியான ஆய்வறிக்கை, இந்த மீன்களின் ஆரோக்கியம் குறித்து சில தகவல்களை மட்டுமே அளித்தன, என்கிறார் இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் வட டகோட்டா மாகாண பல்கலைக்கழகத்தின் உயிரியலாளருமான பிரிட் ஹெயிடிஞ்செர். இவர், ஏன் பல்வேறு உயிரினங்களுக்கு வெவ்வேறு விகிதங்களில் வயதாகின்றன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். “இந்த உயிரினங்களில் வயதுக்கு ஏற்ப நாம் ஆரோக்கியத்தில் சரிவை காணவில்லை,” என்கிறார் அவர்.

டெலோமீர் குறைவாக இருப்பது (வயதாவதை உணர்த்தும் உடலியல் அறிகுறி) இந்த மீன்கள் அதிக வயது வரை உயிருடன் இருப்பதுடன் தொடர்புடையது அல்ல. அதற்கு பதிலாக, நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்படுவது, நியூட்ரோபில் – லிம்போசைட் விகிதம் குறைவது உட்பட பல காரணிகளுடன் தொடர்புடையதாக உள்ளன. இதில், நியூட்ரோபில் – லிம்போசைட் விகிதம், இவ்வகை மீன்கள் மன சோர்வை திறம்பட கையாள்வது மற்றும் வயதாகும்போது அதன் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது ஆகியவற்றை குறிக்கிறது.

இந்த மீன்கள் வயதாகும்போது எப்படி தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கின்றன என்பது குறித்து இன்னும் அதிகம் அறியப்படவில்லை என கூறுகிறார் ஹெய்டிஞ்செர். ஆனால், டெலோமீர்கள் குறுகுவதை நொதிகள் மூலம் தடுப்பதன் மூலமாக இதை நிர்வகிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறுகிறார் அவர். ஆனால், டெலோமீர்களை பொறுத்து இவ்வகை மீன்கள் எவ்வளவு காலம் வரை வாழும் என்பதையோ அல்லது வயதாகும்போது அவை ஆரோக்கியமாக இருக்கும் போக்கு தொடருமா என்பதையோ கூற இயலாது. “வயதாகுதல் என்பது சீரான ஒன்று அல்ல,” என கூறுகிறார் ஹெய்டிஞ்செர்.

இந்த சமீபத்திய ஆராய்ச்சியில் மற்றுமொரு புதிருக்கான விடை கிடைத்துள்ளது. வயதான, அதிகளவிலான மீன்கள் இருப்பது மற்றொரு கேள்விக்கு வழிவகுத்துள்ளது. அதாவது, மற்ற இளம் மீன்கள் எங்கே உள்ளன?

பிக்மௌத் பஃபல்லோ

பட மூலாதாரம், Alec Lackmann

படக்குறிப்பு, மின்னிசோட்டா ரைஸ் ஏரியில் ஒவ்வொரு வசந்த காலத்தில் இந்த மீன்கள் வெற்றிகரமாக முட்டையிடுகின்றன, ஆனால் கோடைக்காலத்தின் பிற்பகுதியிலேயே இளம் மீன்கள் குறித்த அனைத்துத் தடயங்களும் அழிந்துபோகின்றன

இளம் மீன்குஞ்சுகள் எங்கே?

லக்மனும் அவருடைய சகாக்களும் மின்னிசோட்டா ரைஸ் ஏரியில் மீன்களின் இனப்பெருக்கப் போக்கையும் ஆராய்ந்தனர். சமீபத்திய ஆராய்ச்சியில், அவர்கள் ஆய்வு செய்த 390 மீன்களில் 389 மீன்கள் அதாவது 99.7% மீன்கள், 50 வயதுக்கு மேற்பட்டவையாக உள்ளன. சராசரி வயது 79. அதாவது, இவற்றில் பெரும்பாலான மீன்கள், இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கு முன்பாக பிறந்தவை.

ஆனால், இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இவ்வகை மீன்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் முட்டையிட்டு, கோடைக்காலத்தின் இறுதியிலேயே புதிய இளம் மீன்குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்தாலும், அவற்றுக்கான ஆதாரங்கள் எதுவுமே தென்படுவதில்லை. உண்மையில், 60 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு புதிய இளம் தலைமுறை மீன்கள் வெற்றிகரமாக உருவெடுக்கவில்லை என்கிறார் லக்மேன். “1957க்குப் பிறகு பிழைத்த ஒவ்வொரு இளம் மீன்களும் விதிவிலக்கானதாகவே உள்ளன.”

பைக் வகை மீன்களால் வேட்டையாடப்படுவதே, இத்தகைய அபரிமிதமான வீழ்ச்சிக்குக் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பைக் மீன்களும் ரைஸ் ஏரியில்தான் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டையிடுகின்றன. எனவே, பைக் வகை இளம் மீன்கள், பஃபல்லோ மீன் குஞ்சுகளை வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக லக்மேன் கூறுகிறார். இவ்வகை இளம் மீன்கள் பெரும்பாலும் பிழைப்பதில்லை என்பதாலேயே பெரிய மீன்கள் நீண்ட காலத்திற்கு வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், இதை உறுதியாக அறிய இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை.

“இது, கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்வி போன்றது,” என்கிறார், ரைஸ் ஏரியின் தேசிய வனவிலங்கு புகலிடத்தின் மேலாளரும் இந்த ஆராய்ச்சியின் இணையாசிரியருமான வால்ட் ஃபோர்ட். ஒருபுறம், இவை எப்போதும் அதிக காலம் வாழும் உயிரினமாக இருந்திருக்கலாம் என்றும், எனவே அவசரமாக மீன் குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்வதற்கான தேவை இருந்திருக்காது என்றும் கூறுகிறார் அவர். மற்றொருபுறம், மீன் குஞ்சுகளை வளர்ப்பதில் உள்ள கடினங்களால், இத்தகைய மீன்கள் அதிக காலம் வாழ்வதற்கான தேவையை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த மீன்களின் அதிகபட்ச ஆயுட்காலம் என்ன, ஏன் 60 ஆண்டுகளாக இளம் மீன்கள் பிழைப்பதில்லை என்பதற்கான முரண்பாடுகள் குறித்து யாருக்கும் தெரியவில்லை. ரைஸ் ஏரியில் உள்ள மீன்கள் தவிர்த்து, மற்ற பகுதிகளில் உள்ள மீன்களும் இதனுடன் கலந்திருக்கலாம். இதுவரை ஆய்வு செய்யப்பட்ட மீன்களுள் பெரும்பாலானவை வயதானதாக இருப்பதால், இந்த போக்கு பரவலாக இருக்கலாம். தற்போதுள்ள இந்த மீன்களுக்கு வயதாவதால், அவை எளிதில் பாதிக்கப்படும் உயிரினங்களாக உள்ளன.

“அதுதான் (லக்மன் ஆய்வில்) உண்மையில் அச்சம் தரத்தக்க விஷயமாக உள்ளது,” என்கிறார் ஹெய்டிஞ்செர். வயதான மீன்கள் அதிகளவில் இறக்கும்போது, அதன் “எண்ணிக்கை முற்றிலுமாக அழிந்துபோகும் வாய்ப்பு உள்ளது.” தற்போது இந்த மீன்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து யாருக்கும் தெரியாது.

இவ்வகை பெரிய மீன்களை வேட்டையாடுபவையாக மனிதர்கள் மட்டுமே உள்ளனர். சிறப்பு கவனம் தேவைப்படும் உயிரினமாக கனடாவில் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த மீன்கள், ஆபத்தில் உள்ள இனமாக பென்சில்வேனியாவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மற்ற பகுதிகளில் இதனை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மின்னிசோட்டாவில் வில் இந்த மீன்களை எவ்வளவு பிடிக்க முடியும் என்பதில் கட்டுப்பாடு இல்லை என்கிறார் ஃபோர்டு. “பல சமயங்களில் இந்த மீன்களின் உடல்கள் குவியலாகக் கிடக்கும்,” என்கிறார் அவர்.

பிக்மௌத் பஃபல்லோ

பட மூலாதாரம், Alec Lackmann

படக்குறிப்பு, இவ்வகை மீன்களுக்கு வயதாகும்போது உடலியல் ரீதியாக ஆரோக்கியத்தில் சரிவு ஏற்படுவதில்லை என ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது

அழிவை நோக்கி…

பாதுகாப்பும் விழிப்புணர்வும் தான் முக்கியம் என்கிறார் லக்மன். மக்கள் பெரும்பாலும் இவற்றை ஆக்கிரமிக்கும் கெண்டை மீன்கள் என நினைத்து அவற்றை அழிப்பதன் மூலம் சூழலியலுக்கு உதவுவதாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த மீன்கள், ஆக்கிரமிப்பு மீன்களிடமிருந்து சூழலியலை பாதுகாக்கும் உள்நாட்டு மீன்கள் என்கிறார் அவர்.

இந்த மீன்களை பிடிப்பதில் மின்னிசோட்டா நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என தான் நம்புவதாகக் கூறும் ஃபோர்டு, விஞ்ஞானிகளும் இந்த மீன்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதில் உதவ முடியும் என நம்புகிறார். “இதுகுறித்த ஆராய்ச்சியை நாம் துரிதப்படுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.

இதுவரை இவ்வகை மீன்கள் முக்கியமான அல்லது ஆர்வமான மீன் இனமாக கருதப்படவில்லை. எனவே, அவைகுறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது கடினமாக உள்ளது. சூழலியல் ரீதியாகவும் அவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படவில்லை. இந்த மீன்கள் புறக்கணிக்கப்படுவதும், அதன் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்காக நிதி ஒதுக்கப்படாததும், அதன் முக்கியத்துவம் மற்றும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகள் இல்லாததும் ஒரு சுழற்சியாக உள்ளது. பல மீன் இனங்கள் இப்படி உள்ளன. குவில்பேக் சக்கர்ஸ், போவ்பைன்ஸ் மற்றும் ரெட்ஹார்ஸ் சக்கர்ஸ் போன்ற மீன் இனங்கள் அதிகம் விரும்பப்படாதவையாக உள்ளன.

இந்த உயிரினங்களை பாதுகாப்பது எப்படி என நிபுணர்கள் அறிவதற்கு முன்பு அவை குறித்து இன்னும் அறியப்பட வேண்டும். “இவ்வகை மீனின் உடலியல் குறித்தத் தகவல்கள் அதிகம் தெரியவரவில்லை,” என, ஈவா எண்டெர்ஸ் கூறுகிறார். இவர், கனடாவின் கியூபெக் நகரில் அமைந்துள்ள தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் மீன் சூழலியலாளர் ஆவார். “அதன் வளர்சிதை விகிதம் குறித்தும் எவ்வளவு வெப்பநிலையை அவை தாங்கும் என்பது குறித்தும் நமக்கு சிறிதுதான் தெரியும். இவை அனைத்தும் காலநிலை மாற்றம் இந்த இனங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்த ஆராய்ச்சிக்கு முக்கியமான காரணிகள்.”

அவை எங்கிருந்து இடம்பெயர்ந்தவை என்பது குறித்தோ, முட்டையிடுவதற்கு முன்னும் பின்னும் அவை எங்கிருக்கின்றன என்பது குறித்தோ விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.

அணை கட்டுமானம் போன்ற வாழ்வியல் இடர்பாடுகளால், மீன் குஞ்சுகள் பெரிதாவதில்லை என்ற கருதுகோளும் உள்ளதாக லக்மன் கூறுகிறார். அந்த பிரச்னைகளை கண்டறிந்து, சரிசெய்வது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

ஆராய்ச்சியாளர்களும் சூழலியல் பாதுகாவலர்களும் துரிதமாக செயல்படாவிட்டால், தனித்துவமான இந்த மீன்களை இழக்கும் ஆபத்து ஏற்படும். இவற்றை காப்பதற்கு இன்னும் பல பத்தாண்டுகள் உள்ளதா, அல்லது இன்னும் சில ஆண்டுகள்தான் உள்ளதா என்பது தெரியவில்லை, ஆனால் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு