மின் கட்டண குறைப்பு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் பாராட்டத்தக்கது – சமூக

by sakana1

மின் கட்டண குறைப்பு தொடர்பான பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் பாராட்டத்தக்கது – சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ! on Thursday, January 23, 2025

2025ஆம் ஆண்டின் முதலாவது 06 மாதங்களுக்கு இலங்கை மின்சார சபை முன்வைத்த கட்டண திருத்த யோசனை, இலங்கை பொது பயன்பாடுகள் ஆனைக்குழு தயாரித்த பதில் யோசனை மற்றும் இவை தொடர்பில் மக்கள் ஆலோசனையின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் பரிந்துரைகளும் பகுப்பாய்வு செய்ததன் பின்னர் மின் கட்டணத்தை 20% குறைப்பதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள தீர்மானத்தினை பாராட்டுவதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் சம்பந்தமாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுனில் ஜயசேகர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயக ஆட்சி முறைகளை பின்பற்றும் நாடுகளில் அத்தியாவசிய சேவைகளை சுயாதீன முறைகளின் ஊடாக கண்காணித்து, நுகர்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அதற்கு நிகரான பணியை ஆற்றியுள்ளது.

மின் கட்டண குறைப்புக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் ஊடாக வீட்டு மின் பாவனையாளர்களுக்கும் ஹோட்டல் மற்றும் தொழில்துறைக்கும் பாரிய நிவாரணம் மற்றும் வலு கிடைக்கும்.

மின் கட்டணம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்திருந்ததினால் மின் துண்டிப்பு காரணமாக பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

அத்தகைய நபர்களுக்கு 24 தவணைகளின் ஊடாக மீதம் உள்ள கட்டணத்தை செலுத்துவதற்கான சலுகையுடன் மின்சாரத்தை மீண்டும் வழங்குவதாக இருந்தால் அது மனிதாபிமான செயற்பாடாகும். அத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இதன்போது மற்றுமொரு விடயத்தை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது 2001 – 2004 ஆட்சிக்காலத்தில் கடுமையான நட்டத்தை சந்தித்த மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அந்தப் பணிக்குழுவின் பெரும்பான்மை இணக்கம் தெரிவித்திருந்ததுடன் இந்த செயற்பாடுகளுக்காக சர்வதேச வங்கிகள் பல பங்களிப்பு வழங்குவதற்கும் ஆயத்தமாக இருந்தது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதும் அந்த காலகட்டத்திலாகும்.

மின் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு புதிய பரிந்துரைகளை உள்ளடக்கி ஆயத்தமாக்கிய சட்ட வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு முன் அப்போதைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைத்ததினால் அந்த முயற்சிகள் தோல்வியை சந்தித்தது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சார சபையை வெளி தரப்புகளுக்கு விற்பதற்கோ நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வதற்கோ பரிந்துரைக்கப்படவில்லை என்பதையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைகள் அன்று வெற்றி அளித்திருந்தால் நாட்டுக்கு பாரிய நன்மை நடந்திருக்கும்.

அரச நிறுவனங்கள் முறையான விதத்தில் மறுசீரமைப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு, சரியான முகாமைத்துவத்தின் ஊடாக பயணித்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு அவற்றின் ஊடாக பாரிய வலு கிடைத்து, நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்