கொழும்பு மருதானையில் இலங்கை காவல்துறை நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை காவல்துறையின் மனோநிலை மாறவில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
எனினும் அது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.
காவல் நிலையத்தில் வவுனியாவை சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்யவில்லை . காவல் நிலையத்திற்குள் அவர் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும்? அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஒரு கைதியான அவர் எவ்வாறு மரணத்தை தழுவ முடியும்? ஏன சி.சிறீதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, வவுனியாவை சேர்ந்த பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக இருந்து பிடியாணையில் கடந்த 21ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை வியாழக்கிழமை (23) நடைபெற்றது. அதில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.