புலம்பெயர் தொழில் முதலைகளது அள்ளிவீசல்களில் தேர்தலில் குதித்ததாக சொல்லப்படுகின்ற யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் சிலர் காவல்துறையின் விசாரணை வளையத்தினுள் வந்துள்ளனர்.
தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் தமது செலவீன அறிக்கைகளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் செலவீன அறிக்கைகளை வழங்காதவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ் , அ. உமாகரன் , சி . மயூரன் , த. கிருஸ்ணானந் , ந. கௌசல்யா , குருசாமி சுரேன் உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா ரவிராஜிடம் காவல்துறையினர் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஏனையவர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கறிக்கை சமர்ப்பிக்காதவர்களில் பலரும் புலம்பெயர் நிதியில் தேர்தல் களத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.