திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சர்ச்சை: பாஜக குற்றச்சாட்டுக்கு நவாஸ்கனி எம்.பி சொல்வது என்ன?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டு பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இறங்கியுள்ளதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனை மறுத்துப் பேசும் நவாஸ்கனி, “மலையில் உள்ள தர்காவில் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது” எனக் கூறுகிறார்.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து சர்ச்சை கிளம்புவது ஏன்?
சர்ச்சையின் பின்னணி என்ன?
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. மலையின் மற்றொருபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.
இங்கு கடந்த 1ஆம் தேதியன்று சந்தனக் கூடு திருவிழா தொடங்கியது. அதையொட்டி, கடந்த 18 ஆம் தேதி காலை ஆடு, கோழிகள் பலி கொடுத்து கந்தூரி விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை அறிந்த இந்து அமைப்பினர், ‘மலையில் ஆடு, கோழிகளை பலி கொடுக்கக் கூடாது’ எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சிக்கந்தர் தர்காவில் விழா நடத்தப்பட உள்ளதாக ஐக்கிய ஜமா அத் நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் காவல் துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன் மற்றும் அனிதா தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அப்போது, முஸ்லிம் அமைப்பினரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், ‘தர்காவுக்குச் சென்று வழிபடுவதற்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனால் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு இப்போது அனுமதியில்லை. முன்பு அவற்றை கொண்டு செல்ல அனுமதி இருந்தது குறித்து எங்கள் விசாரணையில் தெரியவந்தால் உங்களை அனுமதிக்கிறோம்’ என கூறியுள்ளனர்
இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஐக்கிய ஜமா அத் அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் ஊர்வலம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக இந்து முன்னணி அமைப்பினர் மீதும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட நான்கு பிரிவுகளில் ஐக்கிய ஜமா அத் அமைப்பினர் மீதும் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நவாஸ்கனி எம்.பி நடத்திய ஆய்வு
இதனை அறிந்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி, புதன்கிழமை (ஜனவரி 22) திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு நடத்தச் சென்றுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான பதிவு ஒன்றையும் நவாஸ்கனி வெளியிட்டுள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 1
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 1
அதில், ‘சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக நேரில் சென்று களஆய்வு செய்தோம். மதுரை காவல் ஆணையரை சந்தித்து, கடந்த காலங்களில் பிரச்னையின்றி சுமுகமாக எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தான் வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும் காசி விஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நவாஸ்கனி, ‘தர்காவுக்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள். அங்கு வரும் மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் தீர்வு காணுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளிடம் தான் பேசியது குறித்துப் பதிவிட்டுள்ள நவாஸ்கனி, தர்காவுக்கு உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை. ஆனால், ஆடு, கோழிகளை எடுத்து செல்வதற்கு இருக்கக் கூடிய தடை குறித்து தாங்கள் பேசிக் கொண்டிருப்பதாக காவல் ஆணையர் விளக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
அசைவ உணவு சர்ச்சை
‘சமைத்த உணவை மலைக்கு எடுத்துச் செல்ல தடை இல்லை’ என காவல் ஆணையர் கூறியதையடுத்து அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டதாகக் கூறி சில புகைப்படங்களையும் நவாஸ்கனி பகிர்ந்துள்ளார்.
அதில் உள்ள ஒரு படத்தில் மலையில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து மூன்று பேர் பிரியாணி சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதன்மூலம், கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக இந்து அமைப்புகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
இதை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ்கனி, இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 2
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 2
தமிழக மக்கள் சமூக நல்லிணக்கக்கத்துடன் அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு நடைமுறைகளை மதித்து நடந்து வருவதாகக் கூறியுள்ள அண்ணாமலை, ‘அதனைக் கெடுக்கும் வகையில் ஒரு எம்.பி நடந்து கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது’ என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பரங்குன்றம் மலையில் தர்கா ஒன்று இடைக்காலத்தில் வந்துள்ளது. இதையே காரணம் காட்டி இந்த மலையே தங்களுக்குச் சொந்தமானது என இஸ்லாமிய அமைப்புகள் பிரச்னை செய்து வருகின்றன’ எனக் கூறியுள்ளார்.
‘திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்க நினைக்கும் சதித் திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்’ எனவும் வானதி சீனிவாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Twitter பதிவை கடந்து செல்ல, 3
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 3
‘நல்லிணக்கத்தைக் கெடுப்பது பாஜக தான்’- நவாஸ்கனி எம்.பி
பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியிடம் பிபிசி தமிழ் பேசியது.
“பல நூற்றாண்டுகளாக சிக்கந்தர் மலையில் தர்கா உள்ளது. அதை திருப்பரங்குன்றம் மலை எனக் கூறினாலும் அன்றாட புழக்கத்தில் சிக்கந்தர் மலை என்றுதான் மக்கள் கூறுகின்றனர்.
அங்கு காலம்காலமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட்டுள்ளனர். மலையில் சமையல் செய்த இடம், ஆடுகளை உரித்த இடம் ஆகியவற்றை தற்போது வருவாய்த்துறை ஆய்வு செய்து வருகிறது” என்கிறார்.
முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக மக்களும் சிக்கந்தர் தர்காவுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருவதாகக் கூறும் நவாஸ்கனி, “சமீபநாட்களாக அங்கு ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்” எனக் கூறுகிறார்.
“அதேநேரம், சமைத்த உணவைக் கொண்டு செல்வதில் தடை இல்லை எனக் காவல்துறை கூறியது. அதிலும் அசைவ உணவைக் கொண்டு சென்றதாக சிலர் சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். யார் என்ன சாப்பிடுவார்களோ அதைத்தானே கொண்டு செல்ல முடியும். உணவைக் கோவிலுக்குள் எடுத்துச் செல்லவில்லை. தர்காவுக்கு தான் கொண்டு சென்றனர்” எனக் கூறுகிறார் நவாஸ்கனி.
“தர்கா மற்றும் விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுக்கான பாதைகள் வேறு வேறு” எனக் கூறும் நவாஸ்கனி, “தர்காவுக்கான பாதையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லலாம். ஆனால், கோவிலுக்கு செல்லும் வழியில் அரசு நிதியில் தரமான பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. நல்லிணக்கத்துக்கான இடமாக தர்கா உள்ளது. அதைக் கெடுக்கும் வேலையில் பா.ஜ.க இறங்கியுள்ளது” எனக் கூறுகிறார்.
திடீர் ஆய்வு ஏன்?
திடீரென ஆய்வு நடத்தச் சென்றது குறித்து நவாஸ்கனியிடம் கேட்டபோது, “தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின்கீழ் தர்கா வருகிறது. அங்கு வழிபாடு நடத்தச் செல்கிறவர்களை தடுப்பதாக புகார் வந்ததால் நேரில் ஆய்வு நடத்தச் சென்றேன். ஏற்கனவே இருந்த நடைமுறைகள் தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்கும் இதைக் கொண்டு செல்ல உள்ளேன்” என்கிறார்.
“அண்ணாமலை சொல்வதைப் போல, நான் மலைக்கு மேலே செல்லவில்லை. பிரியாணியையும் சாப்பிடவில்லை. மலைக்கு மேல் பாறைகளில் அமர்ந்து சிலர் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்” என்றார்.
“கோவிலுக்குத் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றட்டும். ஆனால், காலம்காலமாக தர்காவுக்குச் சென்று சமைத்துச் சாப்பிட்டு வந்துள்ளதைத் தடுப்பது எந்தவகையில் சரி?” எனக் கேள்வி எழுப்புகிறார் நவாஸ்கனி.
நவாஸ்கனியின் குற்றச்சாட்டை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்படுவது நவாஸ்கனி தான். அவரை திமுக அரசு கைது செய்திருக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு மாநில அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பதாகக் கூறும் நாராயணன் திருப்பதி, “அங்கு ஆடு, கோழிகளை பலியிடும் வழக்கம் இருந்ததில்லை” என்கிறார்.
அறநிலையத்துறை சொல்வது என்ன?
மலையை முன்வைத்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலின் அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரிய நாராயணனிடம் பிபிசி தமிழ் பேசியது. “இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் பேசுகிறேன்” எனக் கூறினார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “நான் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன். இதைப் பற்றி பிறகு பேசுகிறேன்” என்று மட்டும் பதில் அளித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு