சீனாவுக்கு இலங்கையின் கோழி இறைச்சி ஏற்றுமதி ! on Thursday, January 23, 2025
இலங்கை உள்ளூர் கோழிப்பண்ணை தொழிலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சீன சந்தைக்கு கோழி இறைச்சிப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட 15 ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று என நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
உடன்படிக்கையின் விவரங்களை வழங்குகையில், இலங்கை தனது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்துறையின் உப தயாரிப்பான கோழி தலைகள் மற்றும் கால்களை நேரடியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் பொருளாதாரம் அதன் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்க உதவும் என்றார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக, சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நெறிமுறையில் கைச்சாத்திடுவதற்கு விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.