‘கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு கோல்டன் விசா வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம்!

by 9vbzz1

”டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்’களுக்கு ‘கோல்டன் விசா‘ வழங்கும்  திட்டத்தை ” ஐக்கிய அரபு இராச்சியம் அண்மையில்  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியமானது வெளிநாட்டவர்களைக் கவர பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில்  சமூக வலைத்தளங்களான  ‘பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், யுடியூப்’ உள்ளிட்ட டிஜிட்டல் ஊடகங்களில் சொந்தமாக கருத்துக்களைப் பதிவேற்றி வரும் டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை, அந்நாட்டு அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுவரை காலமும்  திரை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வந்த இக் கோல்டன் விசா திட்டம்  தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களுக்கும் வழங்கப்படவுள்ளமை  உலக நாடுகள்  மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இக்  கோல்டன் விசாவினைப் பெறுவதன் மூலம்  10 ஆண்டுகள் வரை அந்நாட்டில் வசிக்க முடியும் எனவும்,  அதன்பின், அந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வசதிகள்  ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும், இது தவிர, முழு வரி விலக்குடன், மேம்பட்ட மருத்துவ வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்த விசாவினைப்  பெற குறைந்தபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும் எனவும், கடவுச் சீட்டு,  முந்தைய பணி அனுபவங்கள் தொடர்பான சான்றுகள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களாக தனித்துவ சாதனைகள் படைத்திருப்பது அவசியம் எனவும் ஐக்கிய அரபு  இராச்சியம்  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்