மருதானை காவல் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70 ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட காவல்துறையினரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இந்த மரணம் காவல்துறையினரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் காவல்துறையினரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
நாட்டின் தலைநகரிலுள்ள 24 மணி நேரமும் தீவிரமான செயற்பாட்டில் இருக்கக்கூடியதெனக் கருதப்படுகின்ற சர்வதேச சமூகத்தினரும் வெளிநாட்டுச் சுற்றுலாபயணிகளும் அதிகம் நடமாடுகின்ற பகுதியிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.
ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும் 70 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட காவல்துறையினரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை இச்சம்பவத்தின் பின்னணிகள் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றது.