அமைச்சர்களுக்கான சிறப்புரிமைகள் மேலும் குறைப்பு ! on Thursday, January 23, 2025
கடந்த அரசாங்கத்தின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மறுத்துள்ளார்.
மேலும், பல சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த வகையில், முந்தைய அரசாங்கத்தின் கீழ் மூன்று வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 2,250 லிட்டர் எரிபொருள் கொடுப்பனவு தற்போதைய அரசாங்கத்தால் 900 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 50க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் இருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆலோசகர்களை மட்டுமே நியமித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
முன்னாள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி தற்போதைய அரசாங்கத்தின் எந்த அமைச்சரோ அல்லது பிரதி அமைச்சரோ சலுகைகளைப் பெறவில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால மீண்டும் வலியுறுத்தினார்.