யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி தெற்கை சேர்ந்த உதயகுமார் விதுஷன்(வயது 32), எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். கரவெட்டியைச் சேர்ந்த தேவமனோகரன் பிரணவன் (வயது 23) எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் , யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞன் , வீதியில் மாடுகளை கூட்டி (சாய்த்து) சென்ற இளைஞனுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் , மாடுகளை சாய்த்து சென்ற இளைஞனும் படுகாயமடைந்த நிலையில், வீதியில் சென்றவர்கள் இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அந்நிலையில் மாடுகளை சாய்த்து சென்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.