பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • எழுதியவர், ரெபக்கா மொரெல்லெ
  • பதவி, அறிவியல் ஆசிரியர்

இத்தாலியில் உள்ள பழங்கால ரோமானிய நகரமான பொம்பெய்யில், 2,000 ஆண்டுகளாக எரிமலை பாறைகள் மற்றும் சாம்பலின் கீழ் மறைந்திருந்த ஒரு கட்டமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘நூறாண்டுகளுக்கு ஒரு முறை’ மட்டுமே இத்தகைய கண்டுபிடிப்புகள் சாத்தியம் என கூறப்படுகிறது. வெப்பமான, வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த குளியலறைகள், அற்புதமான கலைப்படைப்புகள், மற்றும் ஒரு பெரிய குளம் கொண்ட முழுமையான ஒரு தனியார் குளியல் இல்லத்தை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை அங்கு கண்டுபிடிக்கப்பட்டவற்றிலே இதுதான் மிகப்பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு பெரிய அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட வீடு ஒன்றின் மையப்பகுதியில் ஸ்பா (Spa) போன்ற இந்த வளாகம் அமைந்துள்ளது.

“இதுபோன்ற இடங்கள் தான் உண்மையில் பொம்பெய் விளைவு என சொல்லப்படுவதின் ஒரு அங்கம். ஏதோ மக்கள் சில நிமிடங்களுக்கு முன்புதான் வெளியேறியதைப் போல் உள்ளது,” என்கிறார் பொம்பெய் தொல்லியல் பூங்காவின் இயக்குநர் கேப்ரியல் ஜோக்ரீகெல்.

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, குளியல் இல்லத்தின் உடை மாற்றும் அறை சிவப்பு சுவர்களையும், மொசைக் தரை மற்றும் கல் இருக்கைகளை கொண்டிருக்கிறது

வெசூவியஸ் எரிமலை வெடிப்பு

அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளின் ஆய்வு, கி.பி. 79ஆம் ஆண்டில் வெசூவியஸ் எரிமலை வெடித்து சிதறிய போது பொம்பெயின் மக்கள் சந்தித்த பயங்கரத்தை காட்டுகிறது.

இரு உடல்களில் ஒன்று கையில் நகைகளையும் காசுகளையும் இறுக்கிக் கொண்டிருக்கும் 35 முதல் 50 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணினுடையது. மற்றொரு உடல் பதின்ம வயது அல்லது 20களில் உள்ள ஒரு இளைஞனுடையது.

அவர்கள் வீட்டின் உள்ளே ஒரு அறையில் இருந்தனர். ஆனால் அவர்கள் நகர் முழுவதும் பாய்ந்தோடிய பைரோகிளாஸ்டிக் ஃப்ளோ எனப்படும் அதீத வெப்பத்துடன் கூடிய எரிமலை வாயு மற்றும் சாம்பலால் கொல்லப்பட்டனர்.

“இது ஒரு ஆச்சரியமான இடம். நீங்கள் காண்பதெல்லாம் இங்கு அரங்கேறிய காட்சிகளை விவரிக்கின்றன,” என்கிறார் பொம்பெய் காப்பாளர், டாக்டர் லுடோவிகா அலீஸ்.

ரோமானிய பழமையான நகரத்தின் அறை அமைப்பு

இந்த பழமையான நகரின் மூன்றில் ஒரு பகுதி இன்னமும் அந்த பேரிடரின் எரிமலை எச்சங்களுக்கு அடியில் புதைந்திருக்கின்றன. ஆனால் இந்த தலைமுறையின் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு பண்டைய கால ரோம வாழ்க்கை குறித்த புதிய புரிதல்களை தருகிறது.

பொம்பெய்யின் ஒரு முழு தெருவே வெளிப்படுத்தப்பட்டு, ஒரு சலவையகம், பேக்கரி மற்றும் அந்த பெரிய வீடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஒரு பெரும் செல்வந்தருக்கு சொந்தமானவையாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த நபர் பொம்பெய்யில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாக இருந்த ஆவ்லஸ் ரஸ்டியஸ் வெரஸ் என்பவராக இருக்கக் கூடும்.

குளியல் இல்லத்தின் கண்டுபிடிப்பு அவரது செல்வ வளத்தை உறுதி செய்வதாக கூறுகிறார் டாக்டர். ஜோக்ரீகல்.

“தனிநபர் குளியல் இல்ல வளாகத்துடன் வெகுசில வீடுகளே உள்ளன, எனவே அவை பணக்காரர்களிலும் பணக்காரர்களுக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. எனவே இது மிகப் பெரியது. பொம்பெய்யின் ஒரு தனியார் வீட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய குளியல் இல்லம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.” என்கிறார் அவர்.

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, குளிர்ந்த அறையின் குளத்தில் இருபது முதல் முப்பது பேர் குளிக்கலாம்

பிரமாண்ட குளியல் அறைகள்

இந்த குளியல் அறைகளை பயன்படுத்தும் பேறு பெற்றவர்கள், செந்நிற சுவர்களையும், ரோம சாம்ராஜியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்கு கற்கள் பதித்த மொசைக் தரைகளையும் கொண்ட அறைகளில் உடைகளை களைந்திருப்பார்கள்.

அதன்பின் அவர்கள் வெந்நீர் அறைக்குச் சென்று குளியல் தொட்டியில் இறங்கி, சூடான காற்றை அடிப்புறத்தில் வீச அனுமதிக்கும் தளம் மற்றும் வெப்பம் தங்கக்கூடிய வகையில் கட்டப்பட்ட சுவர்கள் அளிக்கும் சானா (Sauna) போன்ற வெதுவெதுப்பை அனுபவித்திருப்பார்கள்.

பின்னர் அவர்கள் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்ட வெதுவெதுப்பான அறைக்கு செல்வார்கள். அங்கு அவர்களுக்கு எண்ணெய் பூசப்பட்டு பின்னர் ஸ்ட்ரைகில் (Strigil) என்று அழைக்கப்படும் உபகரணம் மூலம் சுரண்டி எடுக்கப்படும்.

பழங்கால ரோமானிய நகரமான பாம்பேய்யின் அற்புத பெருவாழ்வை காட்டும் அரிய கண்டுபிடிப்பு

படக்குறிப்பு, அந்த அறையின் கட்டமைப்பு

இறுதியாக இருப்பதிலேயே மிகவும் அற்புதமானதும் பெரியதுமான ஃபிரிஜிடேரியம் (Frigidarium) என அழைக்கப்படும் குளிர்ந்த அறைக்குள் அவர்கள் நுழைவார்கள். செந்நிற தூண்களாலும், வீரர்களின் சுவரோவியங்களாலும் சூழப்பட்ட அறையில் விருந்தினர் குளத்தில் குதித்து குளிர்ச்சியடையலாம். இந்த குளம் 20 முதல் 30 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில் மிகப்பெரியதாக உள்ளது.

சூடான கோடைக்காலங்களில், நீங்கள் தண்ணீரில் கால்களை நனைத்தப்படி அமர்ந்து கொண்டு ஒரு கோப்பை வைனை சுவைத்துக் கொண்டே நண்பர்களுடன் பேசி மகிழலாம்,” என்கிறார் டாக்டர். ஜோக்ரீகல்.

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, பிரார்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட சிறிய நீல அறை.

இந்த அசாதாரணமான வீட்டில் அண்மையில் வெளிவந்ததுதான் இந்த குளியல் இல்லம்.

மிகக் கருமையான சுவர்களையும், பாரம்பரிய ஓவியங்களையும் உடைய பெரிய விருந்துண்ணும் அறை கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெளிர் நீல வண்ணம் பூசப்பட்ட சற்றே சிறிய அந்தரங்க அறையும் கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் வசித்தவர்கள் இந்த சிறிய அறைக்குச் சென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள்.

அந்த வீடு புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பொருட்களும் உபகரணங்களும் வீடு முழுவதும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. நீல அறையில், பொடி செய்து சுவர்களில் பூசி அவற்றிக்கு பளபளப்பை தருவதற்கு தயாராக சிப்பி ஓடுகள் தரையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த இடத்திற்கு அருகிலேயே எந்தவொரு அலங்காரமும் இல்லாத மற்றொரு குறுகலான அறையில், எரிமலை வெடிப்பிலிருந்து தப்ப முடியாத பொம்பெய்வாசிகள் இருவரின் உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பெண் ஒருவரின் எலும்புக்கூடு ஒரு படுக்கையின் மீது சுருண்டு படுத்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஒரு ஆணின் உடல் இந்த சிறிய அறையின் ஒரு மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Archaeological Park of Pompeii/Sophie Hay

படக்குறிப்பு, கைகளில் நாணயங்களை பற்றிக்கொண்டு பெண்ணின் எலும்புக்கூடு சுருண்டு படுத்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

“வெசூவியஸ் மலையிலிருந்து வந்த பைரோகிளாஸ்டிக் குழம்பு இந்த அறைக்கு வெளியே இருந்த தெரு வழியாக வழிந்தோடியதில் ஒரு சுவர் சரிந்து அந்த நபர் உடல் நசுங்கி உயிரிழந்திருக்கிறார், ” என விளக்குகிறார் பொம்பெய்யில் இருக்கு தொல்லியலாளர்களில் ஒருவரான டாக்டர். சோபி ஹே.

“அந்த ஆண் உயிரிழந்த போது அந்த பெண் உயிரோடுதான் இருந்தார். அந்த கொடுமையை கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னர் இந்த அறை எஞ்சிய பைரோகிளாஸ்டிக் குழம்பால் நிறைந்தது. அப்படித்தான் அவள் உயிர் பிரிந்தது.” என்கிறார்.

ஆணின் எலும்புக்கூட்டை ஆய்வு செய்ததில், இளம் வயதாக இருந்தபோதிலும் அவரது எலும்புகளில் தேய்மானம் அதிகம் இருந்தது. இதனால் அவர் குறைவான அந்தஸ்துடையவராக, ஒருவேளை அடிமையாகக் கூட இருந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

அந்த பெண்ணுக்கு கூடுதல் வயது, ஆனாலும் அவரது எலும்புகளும், பற்களும் நல்ல நிலையில் இருந்தன.

“ஒருவேளை அவள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்திருக்கலாம்,” என்கிறார் டாக்டர் ஹே.

“அவள் அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவியாக இருந்திருக்கலாம், அல்லது அந்த மனைவியை பார்த்துக்கொள்ளும் உதவியாளராக இருக்கலாம், நமக்குத் தெரியாது.”

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, தங்கம் மற்றும் முத்துகளால் செய்யப்பட்ட காதணிகள் பெண்ணின் எலும்புக்கூடு அருகே கண்டெடுக்கப்பட்டன.

ஆண், பெண் கையில் பற்றி இருந்தது என்ன?

அந்த அறையில் இருந்த பளிங்கு மேஜையின் மேல் கண்ணாடி பொருட்கள், வெண்கல கூஜாக்கள், மண் பாண்டங்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. எரிமலை வெடிப்பு முடிவதற்காக காத்திருந்த அந்த இருவரும் இவற்றை கொண்டுவந்திருக்கலாம்.

ஆனால் அந்த இருவரும் கைகளில் பற்றிக் கொண்டிருந்த பொருட்கள்தான் கவனத்தை கவரக்கூடியவையாக உள்ளன. அந்த இளம் ஆண் சில சாவிகளை பற்றிக்கொண்டிருக்க, அந்த பெண்ணோ தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும் நகைகளை வைத்திருந்தார்.

பொம்பெய்யின் பிற விலை மதிப்பற்ற கண்டுபிடிப்புகளுடன் இவையும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தொல்லியலாளர் டாக்டர். அலெசாண்ரோ ரூசோவுடன் இணைந்து காண எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த தங்க நாணயங்கள் புதியவை போல் இப்போது பளிச்சிடுகின்றன. அவர் தங்க மற்றும் முத்து தோடுகள், நெக்லஸில் இடம்பெறும் பதக்கங்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களை நமக்கு காட்டினார்.

“இதைப் போன்ற பொருளை கண்டுபிடிக்கும் போது, பழங்காலத்திற்கும், நவீன காலத்திற்குமான இடைவெளி காணாமல் போய்விடுகிறது,” என்கிறார் டாக்டர் ரூசோ.

“எரிமலை வெடிப்பில் உயிரிழந்த மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை நம்மால் தொட்டுப் பார்க்கமுடிகிறது.”

அந்த தனியார் குளியல் இல்ல வளாகம் நூற்றாண்டில் ஒருமுறை நிகழும் கண்டுபிடிப்பு என விவரிக்கும் டாக்டர். சோபி ஹே, அது ரோமானியர்களின் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறுகிறார்.

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, பெண்ணின் எலும்புக்கூட்டுடன் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயத்துடன் தொல்லியலாளர் அலெசான்றோ ரூசோ.

வெப்ப அறைக்கு பின்புறத்தில் கொதிகலன் அறை உள்ளது. தெருவில் இருந்து பைப் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு ஒரு பகுதி குளிர்ந்த குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எஞ்சிய தண்ணீர் வெப்ப அறைக்கு கொண்டு செல்லப்படுவதற்காக ஒரு ஈய கொதிகலனின் சூடுபடுத்தப்பட்டது. தண்ணீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட வால்வுகள் இன்றும் பயன்படுத்தலாமோ என்று நினைக்கும் அளவு நவீனமானவையாக இருக்கின்றன.

கொதிகலன் அடியில் இருந்த நிலையில், அவற்றை இயக்க இந்த அறையில் இருக்க வேண்டிய அடிமைகள் தாங்கமுடியாத வெப்பத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

“இந்த அகழாய்வுகளில் மிகவும் வலுவாக வெளிப்படுவது மிகப்பெரிய பணக்காரர்கள் மறும் அடிமைகளின் நேர் எதிர் வாழ்க்கைகள் தான். அதை நாம் இங்கு காண்கிறோம்,” என்கிறார் டாக்டர் சோபி ஹே.

“குளியல் இல்லத்தில் நிறைவான வாழ்விற்கும், அடிமைகள் தீயை மூட்டி வெந்து கொண்டிருந்த கொதிகலன் அறைக்கும் வித்தியாசம் இருந்தது. இந்த இரண்டு உலகங்களையும் பிரித்தது ஒரே ஒரு சுவர்தான்.”

பாம்பேய், ஆடம்பர வாழ்க்கை

பட மூலாதாரம், Tony Jolliffe/BBC

படக்குறிப்பு, குடியிருப்பின் கொதிகலன் அறையில் உள்ள குழாய்கள்

இந்த அகழாய்வு அதன் இறுதி கட்டத்தில் இருக்கிறது. ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் சாம்பலில் இருந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அகழாய்வு தொடரும் போது குறைந்த அளவிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் காலப்போக்கில் பொதுமக்கள் பார்வைக்கு முழுமையாக திறந்துவிடப்படும்.

“இங்கு ஒவ்வொரு நாளும் ஆச்சரியம்தான்,” என்கிறார் அகழாய்வின் இயக்குநர் அன்னா ஒன்ஸ்டி.

“சில நாட்கள் காலையில் வழக்கமான பணி நாள் என நினைத்துக் கொண்டு நான் காலையில் வேலைக்கு வருவேன். வந்த பின்னர் தான் ஏதோ அற்புதமான ஒன்றை கண்டுபிடித்திருக்கிறோம் என உணர்வேன்.” என்கிறார் அன்னா.

“பொம்பெய்யின் வாழ்க்கைக்கு இது ஒரு அற்புதத் தருணம். இதை மக்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த அகழாய்வு எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.” என்று கூறுகிறார் அன்னா ஒன்ஸ்டி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.