அண்மைய குற்ற சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த பலர் கைது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ! on Wednesday, January 22, 2025
நாட்டில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கைது செய்யபடுள்ளவர்களில் இராணுவ மேஜர் ஒருவர், ஏனைய தரங்களில் உள்ள 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை கூறினார்.
கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தினால் இராணுவத்தை சேர்ந்த ஒருவர், இருவர் இதில் தொடர்புப்பட்டுள்ளனர். இந்த தினங்களில் இராணுவ மேஜர் ஒருவர், ஏனைய தரங்களில் உள்ள 6 அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, திட்டமிட்ட குற்றகும்பலை சேர்ந்த 15 பேரும், அவர்களுக்கு உதவிய 15 பேரும் கைதாகியுள்னர்.
அத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் T56 துப்பாக்கிகள் -7, பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 10, ரிவால்வர்கள் 14,
வெடிமருந்துகள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் 461,
போர 12 ரக துப்பாக்கிகள் 58 என்பன கைபற்றப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த 2 மாதங்களுக்குள் 354 கிலோகிராம் ஹெராயின், 3,847 கிலோகிராம் கேரள கஞ்சா, 3.8 கிலோகிராம் கொக்கெய்ன், 181.9 கிலோகிராம் ஹாஷிஷ் மற்றும் 759 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நிதி குற்றப் பிரிவு அடுத்த வாரம் மீண்டும் நிறுவப்படும் அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ள 29,000 கோப்புகளில் இருந்து நிதிக் குற்றக் கோப்புகளை அந்தப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.