கிளிநொச்சியில் இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா அபராதத்துடன் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி அதிகாலை இரணைதீவை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து, நீதிமன்ற கட்டளைக்கு அமைய இன்று வரை அந்த 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் இன்றைய தினம் (22)கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்த முதலாவது குற்றச்சாட்டுக்கு 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இரண்டாவது குற்றச் சாட்டுக்கு எட்டுப் பேருக்கும் தலா ஐம்பதாயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட எட்டு மாத கால சிறைத்தண்டனையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.