by adminDev

யாழில் இளைஞரின் ஆடைகளை களைந்து, சித்திரவதை செய்த கும்பல் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி, கட்டிவைத்து தாக்கிய கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையவர்களை தேடும் நடவடிக்கையில் கோப்பாய் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையின்போது, தாயின் கண்ணெதிரிலேயே இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரை சிலர், அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, சித்திரவதை செய்து, கட்டிவைத்து மிக மோசமான தாக்கியுள்ளனர்.

இளைஞரை சித்திரவதை செய்து தாக்கிய காட்சிகளை, அந்த கும்பல் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர்  கைது செய்யபட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இளைஞர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபோது , எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற  சந்தேகத்தில் சுமார் 20 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்