by adminDev2

நல்லாட்சி அரசு காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா என இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போது சாணக்கியன் கேள்வி எழுப்பினர்.

சாணக்கியன் உரை பின்வருமாறு,

கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் எம்முடைய மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வீடமைப்பு அதிகாரசபையின் அமைச்சராக இருக்கும் போது உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மட்டுமில்லை இலங்கை முழுவதும் அவருடைய திட்டத்தின் கீழ் வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால், கடந்த அரசாங்கம் 2019 ஆம் ஆண்டிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச அவர்களை பழிவாங்கும் அடிப்படையில் அந்த வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்யாமல் அரைகுறையாகவே விட்டுள்ளன. பல வீட்டுத்திட்ட பயனாளிகளில் பலர் கடனாளி களாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்டளவு வேலைகளை செய்தால் அடுத்த தொகை கிடைக்கும் என்றே அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் போரதீவுப்பற்றாக இருக்கட்டும் வாகரையாக இருக்கட்டும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவாக இருக்கட்டும் மாவட்டம் முழுவதும் எத்தனையோ வீடுகள் குறைபாட்டுடனேயே காணப்படுகின்றன.

நீங்கள் அளித்த பதிலிலே உங்களுக்கான ஒதுக்கீடுகள் வரும்போது செய்யலாம் என்று கூறியிருந்தீர்கள். ஆனால் என்னுடைய கேள்வி, இந்த மக்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஒரு கடனாளியாக வீடும் இல்லாது, கடனும் வாங்கி கடனாளியாக இருப்பது. கடந்த கோட்டாபய ஆட்சிக் காலத்தில் முதலாவது கட்டமாக அந்த வீடுகளை நிறைவு செய்யுமாறு நாங்கள் வீடமைப்பு அதிகார சபைக்கு கூறினோம்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், இனிவரும் காலத்தில் முடித்து தருகிறோம் என்பது திருப்தியடையக் கூடிய பதில் இல்லை. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்றால் நாம் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருட காலத்திற்குள் நிறைவு செய்து தருகிறோம் அல்லது நாம் முடித்து தர மாட்டோம் என கூற வேண்டும்.

ஏனெனில் இந்த மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு வீடு வருமா இல்லையா என காத்திருப்பது? எனவே என்னுடைய கேள்வி, ஒதுக்கீடுகள் வரும்போது முடித்து தருவோம் என்று கூறுவதை விட ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி. ஒரு மாதமா அல்லது ஒரு வருடமா அல்லது 2025ஆம் ஆண்டிற்குள்ளா என்று ஒரு குறிப்பிட்ட திகதியை கூற முடியுமா என்பது தான் எனது கேள்வி. ஆனால் ஒதுக்கீடுகள் வரும் போது செய்வோம் என்ற பதிலை எமது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பதில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, மட்டக்களப்பு மக்கள் தொடர்பிலான உங்களது கரிசனையை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. எனினும் வீடமைப்பு அதிகார சபையில் நாம் பெற்ற தகவல்களுக்கு அமைய கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படாத நிலையில் சுமார் 48 ஆயிரம் கணக்கான வீடுகள் உள்ளன. நீங்கள் குறிப்பிட்ட மட்டக்களப்பு மாவட்ட வீட்டுத்திட்டங்கள் அந்த 48 ஆயிரத்தில் உள்ளடங்கும் சிலவாகும். நீங்கள் குறிப்பிட்டது போன்று அந்த 48 ஆயிரத்தில் சிலது அடிக்கல் நாட்டப்பட்டவை சிலவற்றுக்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பல வீட்டுத்திட்ட பயனாளிகள் கடன் பெற்றுள்ளனர். கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் வீடுகளை நிறைவுசெய்ய முடியவில்லை. அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

வீடமைப்பு அதிகார சபையுடன் எமது அமைச்சு நடத்திய கலந்துடையாடலுக்கு அமைய பல்வேறு பெயர்களின் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் நிறைவுசெய்யப்படாத வீடமைப்பு திட்டங்களை கட்டம் கட்டமாக ஒதுக்கீடுகள் கிடைக்கும் அடிப்படையில் நிறைவு செய்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதேவேளை மீண்டும் விசேடமாக அரச வங்கிகளுடன் கலந்துரையாடி ஏதேனும் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து அவர்களுக்கு தமது வீடுகளை நிறைவு செய்து கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

இதேவேளை வருடாந்த வரவு செலவு திட்டத்தில் வீடமைப்பு அதிகார சபைக்கான ஒதுக்கீடுகளின் ஊடாக ஒரு பகுதியை கட்டம் கட்டமாக இந்த வீட்டுத் திட்டத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்தும் திட்டங்களை வகுத்து வருகிறோம். எனினும், 48 ஆயிரம் வீடுகளையும் நிறைவு செய்ய பாரிய தொகை பணம் செலவாகும்.

அதனை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். கிடைக்கப் பெறும் நிதி ஒதுக்கீடுகளுக்கு அமையவே எந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து எப்போது நிறைவு செய்வது என்பதை குறிப்பிட முடியும். ஆனால் குறித்த விட்டுத்திட்டத்தை குறித்த காலத்தில் நிறைவு செய்வோம் என்பதை உறுதியாக என்னால் கூற முடியாது. அது குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி கௌரவ அமைச்சர் அவர்களே. இந்த வீடமைப்பு திட்ட தேவையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடி அதிகளவான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்