by wp_shnn

நிதி அமைச்சு அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயற்திறனுடனும், திறமையாகவும் பொருளாதார செயல்முறையைக் கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

மேலும், கடந்த அரசாங்கங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் பயனுள்ள திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தேசிய திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கடன்களை ஒரு வருடத்திற்குள் வசூலிப்பது குறித்தும் அந்த வர்த்தகர்களிடம் உள்ள அரிசி கையிருப்புகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேல் தளத்தில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார்.

தற்பொழுது அமுலில் இருக்கும் நிவாரணம் வழங்கும் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும் , நிவாரணங்கள் தேவையான சமூகத்தை சரியாக அடையாளம் கண்டு, அந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்