அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை நிறுவ சுகாதார அமைச்சால் நடவடிக்கை தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை இயந்திரங்களை நிறுவ சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை தனிமனித அவலமாக கருதாமல், ஒட்டுமொத்த தேசத்துக்கும் உள்ள சவாலாக கருதி, அதிலிருந்து பொது மக்களை காப்பாற்ற நடவடிக்கை முன்னெடுப்பதே சுகாதார அமைச்சினதும், தற்போதைய அரசாங்கத்தினதும் முதன்மையான நோக்கமாகும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களை தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைக்கும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை (20) சுகாதார அமைச்சில் இடம்பெற்றிருந்தது. எலெக்டா யூகேவின் மூலோபாய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் குந்தல் பத்ரா மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தொற்றா நோய்களுக்கு மத்தியில் புற்றுநோய் பரவலும் மக்களிடையே வெகுவாக அதிகரித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஆகையால் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டங்களை வலுவாக அமுல்படுத்தவும் சுகாதார அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
புற்றுநோயை தனிமனித அவலமாக கருதாமல், ஒட்டுமொத்த தேசத்துக்கும் உள்ள சவாலாக கருதி, அதிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை முன்னெடுப்பதே சுகாதார அமைச்சினதும், தற்போதைய அரசாங்கத்தினதும் முதன்மை நோக்கமாகும்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் பல மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவிகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புற்று நோயாளர்கள் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் இந்நோயால் பாதிப்புக்குள்ளாகியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் நிம்மதி அடைவார்கள். இலங்கையில் இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டத்தின் கீழ் ஒன்பது வைத்தியசாலைகளில் அதிநவீன தொழில்நுட்ப கதிரியக்க சிகிச்சை உபகரணங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் கீழ், ஐந்து மாகாணங்களில் உள்ள ஐந்து போதனா வைத்தியசாலைகளில் இந்த ஐந்து இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.
ஒட்டுமொத்த திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் 14 இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 16 மில்லியன் டொலர்களும், இரண்டாம் கட்டத்தில் 13 மில்லியன் டொலர்களும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. முழு திட்டத்திற்கான திட்ட முதலீடு 29 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும், வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் , ஊவா மாகாணத்தில் பதுளை போதனா வைத்தியசாலையிலும், தென் மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் அம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலையிலும், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் மேற்படி இயந்திரங்களை நிறுவ சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.