உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் விடயத்தை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமுல்படுத்துவது பாரிய பிரச்சினை கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் செயற்பாடுகள் உள்ளருாட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களாகும். அரசாங்கம் இதனை கொள்கையாக வைத்திருப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் இந்த விடயத்தை ஜனாதிபதி அவருடைய செயலகத்தின் கீழ் அமுல்படுத்துவது பாரிய பிரச்சினையாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிளீன் சிறிங்கா என்ற கோட்பாடு அரசியல் யாப்பின் 33ஆம் பிரிவின் கீழ்தான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதனை மூன்றாக பிரித்திருக்கிறது. முதலாவது, சமூகரீதியிலான விடயம், இரண்டாவது சுற்றுச்சூழல், மூன்றாவது கொள்கை. சமூகரீதியிலான விடயங்களாக சில விடயங்களை தெரிவித்துவிட்டு, இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்போகிறது என்பதையும் ஒரு வரைபொன்றை தயாரித்து வழங்கி இருக்கிறது. அதில் கிளீன் சிறிலங்கா ஜனாதிபதி செயலணி என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் அரசாங்கம் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் மூலம் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உள்ளூராட்சி மன்றங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களாகும். இது உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரித்தான விடயதானங்களாகும். அது மாத்திரமல்ல இவைகள் யாவும் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட விடயங்களாகும். இதனை அரசாங்கம் கொள்கையாக வைத்திருப்பது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அதற்காக எங்களின் ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருக்கிறது.
ஆனால் உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் விடயத்தை எந்த அடிப்படையில் ஜனாதிபதியால் பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அதிகார பரவலாக்கம் சம்பந்தமாக அரசாங்கம் இதுவரை அவர்களின் நிலைப்பாட்டை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.இந்த சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய அந்த அதிகாரத்தை, மாகாணசபையிடம் நூறு வீதம் கொடுக்கப்பட்ட அந்த அதிகாரத்தை ஜனாதிபதி அவருடைய செயலகத்தின் கீழ் அமுல்படுத்துவது பற்றிய பாரிய பிரச்சினை இங்கு இருக்கிறது.
இதேபோன்ற ஒரு விடயத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ், உள்ளூராட்சி மன்றத்துக்கு கீழ் இருக்கின்ற வீதி சபைகள் என்ற விடயத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு கீழ் நேரடியாக அமுல்படுத்துகின்ற சில திட்டங்களை கொண்டுவந்தார். இதுதான் பிரச்சினை. எனவே கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் பிரச்சினையை தவிர அதன் கொள்கையில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.