குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பல அதிகாரிகள் கைது!- ஆனந்த விஜேபால நாட்டில் சமீப காலங்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஏனைய தரங்களில் உள்ள 6 இராணுவ அதிகாரிகள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதாரம், சமூகம் என்று அனைத்து கட்டமைப்புக்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு கட்டம் கட்டமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர் தரப்பினர் வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.
மக்களின் அனுமதி இல்லாமல் எந்த திட்டங்களையும் நாங்கள் அமுல்படுத்தவில்லை. கிளின் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கு மக்கள் முழுமையும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
வீதி விபத்தை தடுப்பதற்கு பொலிஸார் சிறந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர் , .இவற்றை பற்றி எதிர்தரப்பினர் பேசுவதில்லை. நாட்டில் நாளாந்தம் இடம்பெறும், வீதி விபத்தில் 7 அல்லது 8 பேர் மரணிக்கிறார்கள்.வருடாந்தம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். தற்போது அமுல்படுத்தப்படுத்தியுள்ள புதிய திட்டங்களினால் வீதி விபத்துக்கள் குறைவடைந்துள்ளன.
பாதாள குழுவின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. T 56 துப்பாக்கிகள் – 7, பிஸ்டல் ரக துப்பாக்கிகள் – 10,ரிவால்வர்கள் – 14,வெடிமருந்துகள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் – 461,போர 12 ரக துப்பாக்கிகள் – 58,கல்கடஸ் – 13.ரிப்பீட்டர்கள் – 2 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட மற்றும் ஒத்தாசை வழங்கிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த 2 மாதங்களுக்குள் 354 கிலோகிராம் ஹெரோயின் 3,847 கிலோகிராம் கேரள கஞ்சா, 3.8 கிலோகிராம் கொக்கெய்ன், 181.9 கிலோகிராம் ஆஷிஷ் மற்றும் 759 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிதி குற்றப் பிரிவு அடுத்த வாரம் மீண்டும் நிறுவப்படும்.குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ள 29இ000 கோப்புகளில் இருந்து நிதிக் குற்றக் கோப்புகளை அந்தப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.