பொலிஸ் திணைக்களத்துக்கு தேவைக்கேற்றவாறு இடமாற்றங்களை வழங்க முடியாது. அதனை செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது. ஆனால் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது.நானும் ஆணைக்குழு தொடர்பில் இழுத்தடிப்பு நிலைமையிலேயே இருக்கிறேன். எமது தனிப்பட்ட தேவைகளுக்காக இடமாற்றத்தை வழங்குமாறு கோரவில்லை.
பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹொரணை பகுதியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் குற்றவாளிகளை உருவாக்கியுள்ளனர்.இந்த குற்றச்செயல்களை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் வான்படை கடற்படை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடி வருகிறோம்.
எங்கு துப்பாக்கி சத்தம் கேட்கும் என்ன நடக்கும் என்ற அச்சுறுத்தலான நிலைமையே உள்ளது. நிச்சயமாக இந்த நாட்டை நாம் போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுப்போம். அதற்கான திட்டத்தை நாம் வகுத்து வருகிறோம்.
அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்? அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் கேட்கின்றனர்.தற்போது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.விளக்கமறியில் வைக்கப்படுகிறார்கள்.
அது மாத்திரம் போதாது.முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.அதுவே எமது எதிர்பார்ப்பு.வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னர் விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுக்கள் உரிய முறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் 600 பேருக்கு இடமாற்றத்தை வழங்கினார்.அவர்களே விசாரணைகளை மேற்கொண்ட பழைய அதிகாரிகள்.குற்றச்செயல்கள் தொடர்பில் அவர்களே தரவுகளை அறிந்தவர்கள்.
அவர்களே தற்போது குற்றப்புலாய்வுத்திணைக்களத்துக்கு தேவையான அதிகாரிகள். பொலிஸ் திணைக்களத்துக்கு தேவைக்கேற்றவாறு இடமாற்றாங்களை வழங்க முடியாது.அதனை செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது.ஆணைக்குழுவே முறையான இடமாற்றங்களை வழங்க வேண்டும்.ஆனால் ஆணைக்குழு இழுத்தடிப்பு செய்தது. நானும் ஆணைக்குழு தொடர்பில் இழுத்தடிப்பு நிலைமையிலேயே இருக்கிறேன்.
ஆணைக்குழுவுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்கிறோம் எமது தனிப்பட்ட தேவைகளுக்காக இடமாற்றத்தை வழங்குமாறு கோரவில்லை. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அந்த இடமாற்றங்களை கோருகின்றோம்.எமக்கு கிடைக்கப்பெற்ற மக்களாணையினை நோக்கத்தை புரிந்து கொண்டு ஆணைக்குழு அந்த இடமாற்றங்களை வழங்கும் என நாம் நம்புகிறோம்.
நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை நியமித்துள்ளோம்.விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல முக்கியமான குற்றங்கள் தொடர்பிலான கோப்புகள் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் இந்த கோப்புக்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடங்கி போயுள்ளது.அவற்றை ஆராய வேண்டும்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.இந்த விடயங்களை இந்த வருடத்துக்குள் நிறைவு கொண்டு வந்தால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சுமையாக இருக்காது.
ஆனால் கடந்த 15, 20 வருடங்களாக இந்த கோப்புகள் திணைக்களத்தில் தேங்கி போயுள்ளன. அது தொடர்பில் ஆராய்வதற்கு முந்தைய அரசாங்கம் இடமளிக்கவில்லை.ஒரு அதிகாரிக்கு 100, 200 என்ற அடிப்படையில் கோப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எவ்வாறு அதனை ஒருவரால் செய்வது? அது சிரமமான பணியாகும்.இந்த திணைக்களம் செயலிழந்துள்ளது. திணைக்களம் செயலழிந்தன் பின்னர் கோப்புகளும் தேங்கியுள்ளன.
ஆனால் தற்போது எமக்கு அந்த அனைத்து கோப்புகளையும் திறக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அதிகாரிகள் நெருக்கடிக்கு முகங் கொடுக்க நேர்ந்துள்ளது. எனினும் அந்த அதிகாரிகள் தேசிய ரீதியில் சர்ச்சை தோற்றுவித்த முக்கிய குற்றங்கள் தொடர்பில் விசாரணை அறிக்கையின் கோப்புகளை திறந்து வழக்கு தொடர்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த மாதம், அடுத்த மாதமளவில் வழக்குகள் தொடரப்படும் என்றார்.