ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

by adminDev2

அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த போதே  ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிப்பதாகவும், அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டிற்கு 0.9 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது எனவும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளதாக அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்துள்ளார் எனவும் ,ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவும் தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அரசியல் பிரமுகர்களிற்கான தேவையற்ற செலவீனங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்