கம்பளை, தவுலகல பகுதியில் கடந்த 11ஆம் திகதி பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவி கடந்த 11ஆம் தினதி காலை கடத்தப்பட்டிருந்தார். எனினும் கடத்தப்பட்ட மாணவி இரண்டு நாட்கள் கழித்து 13ஆம் திகதி அம்மாறை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.
கடந்த 11ஆம் திகதி அதாவது, சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி கடத்தப்பட்ட தினத்தில், சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடாக பயணித்த கம்பளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்,
தவுலகல பொலிஸாருக்கு அறிவித்த போதும், கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.