on Wednesday, January 22, 2025
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஐஸ், கேரள கஞ்சா மற்றும் கசிப்பு போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 7 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைதான நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 750 மில்லி லீற்றர் கசிப்பு என்பவற்றுடன் திருப்பெருந்துறையைச் சேர்ந்த நால்வரும் கேரள கஞ்சாவுடன் மாமாங்கம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.