நியூயார்க்கின் மன்ஹாட்டனின் மூன்றில் இரண்டு மடங்கு அளவைக் கொண்டுள்ள பகுதியில் அடுத்த சில வாரங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். பாரிய அளவில் மக்கள் கூடும் ஒரு விழாவாக கும்பமேளா கருதப்படுகிறது.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்தியாவின் பிரயாக்ராஜ் நகரின் வடக்கு பகுதியில் இந்த திருவிழா நடைபெறுகிறது.
முன்பு இந்த நகரம் அலகாபாத் என்று அழைக்கப்பட்டு வந்தது. கங்கா, யமுனா மற்றும் புராண கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி சங்கமிக்கும் இடத்தில் நீராட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். அப்படி நீராடுவதால் அவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவார்கள் என்றும், பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுதலை அடைந்து மோட்சம் பெறுவார்கள் என்றும் நம்புகின்றனர்.
45 நாட்களில் 40 கோடி முதல் 45 கோடி பக்தர்கள் இந்த கும்ப மேளாவில் பங்கேற்க வருவார்கள் என்று அரசு தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் கூடும் கூட்டத்தை ஒரு நாடாக கருதினால், இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது எண்ணிக்கையை இது எட்டும்.
எதிர்பார்க்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம்.
எண்ணிக்கை மில்லியன்களில் உள்ளது
கடந்த 2001 மற்றும் 2013ம் ஆண்டில் நடந்த இரண்டு கும்பமேளாவுடன் ஒப்பிடுகையில், இந்த நிகழ்வு நடக்கும் மைதானத்தின் அளவும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
முழு கும்பம் அல்லது பூரண கும்பம் என்று அழைக்கப்படும் இந்த கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஆனால் அர்த்த கும்பம் என்று அழைக்கப்படும் கும்பம் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இறுதியாக 2019ம் ஆண்டில் அது நடைபெற்றது.
24 ஆண்டுகளுக்கு முன், 2001ம் ஆண்டு, பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்ப மேளாவில் 5 கோடி மக்கள் பங்கேற்றனர் என்று பெங்களூருவில் இருக்கும் இந்திய மேலாண்மை நிறுவனம் உத்தேசித்துள்ளது.
2013ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக அதிகரித்தது. இம்முறை இந்த எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை(மில்லியன்களில்)
கங்கை மற்றும் யமுனை நதிக்கரையின் மணல்திட்டில் கோடிக்கணக்கான மக்கள் இம்முறை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடாரம், அகாடா(சாதுக்களின் மடம்), மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்காக 4000 ஹெக்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தமுறையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
கடந்த மூன்று கும்பமேளா நிகழ்வின் போதும் அமைக்கப்பட்ட மைதானத்தின் பரப்பு(ஹெக்டரில்)
கும்பமேளா கொண்டாடப்படுவது ஏன்?
இந்த விழாவின் தோற்றத்தை புராணங்கள் மூலமும், இந்து மத புத்தகங்கள் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து சாகாவரம் பெற தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது.
அப்போது சிந்திய சில துளி அமிர்தம் ஹரித்வார், உஜ்ஜைனி, பிரயாக்ராஜ் மற்றும் நாசிக் நகரங்களில் விழுந்தது என்ற புராணக் கூற்று இங்கு பிரபலமாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த நான்கு நகரங்களில் கும்பங்கள் நடத்தப்படுகின்றன.
கும்பமேளா என்பதே ஒரு நகரம் தான். சமீப காலத்தில் தங்கும் விடுதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சத்துடன் இந்த பகுதி காணப்படுகிறது.
இங்கே நீராட வரும் மக்கள், நீண்ட நாட்கள் இங்கே தங்க விரும்பினால் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரவு கூடாரங்களில் தங்க இயலும். மருத்துவமனைகள் செயல்படும் அளவுக்கு இங்கு பெரிய பரப்பில் கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக மிதவை பாலங்கள் மற்றும் சில சாலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான மத அமைப்புகள் அவர்களுக்கான கூடாரங்களை உருவாக்க இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி பொது மருத்துவமனை ஒன்று 100 படுக்கைகளுடனும், சிறிய மருத்துவமனைகல் 20 முதல் 25 படுக்கைகளுடனும் தயாராகிவருகிறது.
மேளாவின் போது மக்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தொலைந்து போகும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. தொலைந்தவர்களை பத்திரமாக மீட்டு அவர்களின் குடும்பத்தாருடன் ஒப்படைக்கவும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எழுத்து மற்றும் தயாரிப்பு: ஜாஸ்மின் நிஹாலானி
வடிவமைப்பு: சேத்தன் சிங்
விளக்கப்படங்கள்: புனீத் பர்னாலா
உருவாக்கம்: காவேரி பிஸ்வாஸ்
புகைப்படம் மற்றும் காணொளி: அன்ஷுல் வர்மா, டெப்லின் ராய்
ஐநாவின் மக்கள் தொகை பிரிவு, உலக வங்கி, பிரயாக்ராஜ் மேளா அதிகாரிகள், பி.ஐ.பி., கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் ( CCRT )