இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு – டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?

பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு – முதலீடு செய்யலாமா, கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. (சித்தரிப்புப் படம்)
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்திய பங்குச் சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பங்குகளை வாங்குவோரைவிட விற்பவர்களின் அளவு மிக அதிகமாக இருந்துள்ளது. இதை முன்னிட்டு, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டுமே கடும் சரிவைக் கண்டுள்ளது.

இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு ஜனவரி 21-ஆம் தேதியன்று ரூ.7 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு இந்திய பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? தனிநபர் முதலீட்டாளர்கள் இதை எப்படிப் பார்ப்பது? இப்போதைய சூழ்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?

இதுகுறித்து விரிவாகப் புரிந்துகொள்ள பொருளாதார நிபுணர்களிடம் பேசினோம். அவர்கள் அளித்த விளக்கங்களை இனி பார்ப்போம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு டிரம்ப் காரணமா?

பங்குச் சந்தையில் காணப்படும் இந்த வீழ்ச்சி கடந்த செப்டம்பர் முதலே காணப்படுவதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

அவரது கூற்றுப்படி, உச்சத்தில் இருந்த பங்குச் சந்தை கடந்த இரண்டு மாதங்களாக இதேபோன்ற வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதோடு, நான்கு ஆண்டுகளாக சந்தை உயர்ந்துகொண்டே இருந்ததாகவும், அது மீண்டும் குறையும் என்பது கணிக்கப்பட்டதே என்றும் அவர் கூறுகிறார்.

“நிறுவனங்களின் செயல்பாடு ஆரோக்கியமாக உள்ளது. ஆனால், அதீதமாக உயர்ந்துகொண்டிருந்த மதிப்புக்கு ஈடாக இருக்கவில்லை. அதன் விளைவாக சந்தையில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. அந்தத் திருத்தம்தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

உதாரணமாக, 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் விலை 200 ரூபாய் வரைக்கும் உயர்ந்திருந்தது. அது இப்போது, அதற்குரிய விலையை நோக்கி வருகிறது. அதற்கும் கீழாக, அதாவது 100 ரூபாய் பங்கு 50 ரூபாய்க்கு வீழ்ந்தால்தான் கவலைப்பட வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை,” என்கிறார் நாகப்பன்.

மேலும், செப்டம்பரில் சந்தையின் வீழ்ச்சி தொடங்கியது முதல், அமெரிக்காவில் அதிபர் தேர்தல், இப்போது டிரம்பின் பதவியேற்பு என அனைத்தும் தற்செயலாக ஒரே நேரத்தில் நடப்பதாகவும், நேரடியாக அதற்கும் இந்திய பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கும் தொடர்பில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு – முதலீடு செய்யலாமா, கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்போதைய நிலவரப்படி, “ஐபிஓ பங்குகள் வாங்கப்படுவது குறையவில்லை” என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். (கோப்புப் படம்)

அதேவேளையில், இரண்டுக்கும் இடையே மொத்தமாக சம்பந்தமே இல்லை எனப் புறந்தள்ளிவிடவும் முடியாது என்பதையும் குறிப்பிட்டார் நாகப்பன்.

“டாலருக்கு மாற்று நாணயத்தைப் பயன்படுத்தினால், 100% வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டியுள்ளார். ஒருவேளை செய்துவிடுவாரோ என்ற அச்சத்தின் தாக்கமும் இருப்பதால் சந்தை வீழ்ச்சியின் விகிதம் சற்று கூடுதலாக இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த வீழ்ச்சியை பங்குச் சந்தை அதன் நிலைமையைச் சரிசெய்துகொள்ளும் ஒரு நிலை எனக் குறிப்பிடும் அவர், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இது தொடரும் என்றாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.

“இப்போதைய நிலவரப்படி, ஐபிஓ பங்குகள் அதிகமாக வாங்கப்படுவது குறையவில்லை. ஆகவே கவலைப்படும் அளவுக்கு இதனால் எந்த அபாயமும் இல்லை. ஒருவேளை இந்த நிலைமை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருந்தால் அச்சப்பட்டிருக்க வேண்டும். சந்தையே ஸ்தம்பித்து போயிருக்கும். ஏனெனில், அப்போது சுமார் நான்கு கோடி டி-மாட் கணக்குகளே இருந்தன. ஆனால் இப்போது சுமார் 18 கோடி டி-மாட் கணக்குகள் இருக்கின்றன,” என்று கூறுகிறார் நாகப்பன்.

இப்போது, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்.ஐ.பி போன்றவற்றில் முதலீடு செய்யும் மக்களின் அளவு அதிகரித்துள்ளதால், இதுவோர் ஆரோக்கியமான சந்தைத் திருத்தம் மட்டுமே என்கிறார் அவர். ”அதீதமாக மதிப்பளிக்கப்பட்ட பங்குகள் அவற்றின் உண்மை மதிப்பை நோக்கி இறங்கும் நேரம். இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது,” என்று குறிப்பிட்டார்.

மத்திய பட்ஜெட் நெருங்கி வருவது காரணமா?

பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு – முதலீடு செய்யலாமா, கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்தையின் வளர்ச்சி சீராக இருக்க, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நுகரப்பட வேண்டும் என்கிறார் ராஜேஷ். (கோப்புப் படம்)

பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு டொனால்ட் டிரம்ப் அதிபரானது காரணமில்லை என்ற நாகப்பனின் கூற்றை ஆமோதிக்கிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்.

அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய ஐந்து மாதங்களில் எப்போதுமே சந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது இயல்புதான் என்கிறார் அவர்.

அதோடு, இப்போதைய சூழலில் மத்திய பட்ஜெட்டுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதாகவும் ராஜேஷ் குறிப்பிட்டார்.

“பட்ஜெட்டில் வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளைப் பொருத்தே முதலீட்டாளர்களின் முடிவும் இருக்கும். இந்திய அரசு அதிகமாக வரிகளை விதித்துக்கொண்டே இருந்தால் அதன் தாக்கம் சந்தையில் தெரியும்.

சந்தையின் வளர்ச்சி சீராக இருப்பதற்கு, நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நுகரப்பட வேண்டும். அதற்கு மக்கள் கைகளில் பணம் புழங்க வேண்டும். மக்கள் கைகளில் அதிக பணம் புழங்க வேண்டுமெனில், விலைவாசி குறைவாக இருக்கவேண்டும் அல்லது வருமானம் அதிகமாக இருக்க வேண்டும் அல்லது வரி குறைவாக இருக்க வேண்டும்,” என்று விளக்கினார் ராஜேஷ்.

ஆனால், இந்த மூன்றிலுமே பயன் தரும் சூழல் இல்லாத காரணத்தால், வரக் கூடிய பட்ஜெட்டில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ற கேள்வியுடன், சந்தையில் முதலீடு செய்வது குறித்த தயக்கத்துடன் முதலீட்டாளர்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் ராஜேஷ்.

ஒருவேளை பட்ஜெட் மாற்றங்கள் முதலீடு செய்யும் பணத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளினால், தங்கள் பணத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் மக்கள் இப்போது தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனிநபர் முதலீட்டாளர்களுக்கு பயன் தருமா?

பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு – முதலீடு செய்யலாமா, கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் நிலை லாபகரமாக இருந்தால், அவற்றை இப்போதைக்கு விற்றுவிடுவது நல்லது, இல்லையெனில் மார்ச் மாதம் வரை பொறுத்திருக்கலாம் என்கிறார் ராஜேஷ்.

“ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள், லாபகரமாக இருக்கும் சூழலில் அவற்றை விற்றுவிட்டு, பட்ஜெட் முடிந்து, சந்தை நிலை சீராகும்போது மீண்டும் முதலீடு செய்யலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில், சந்தை நிலை சீராகும் வரை பேப்பர் கோல்டில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும்” என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

ராஜேஷின் கூற்றுப்படி, சந்தை நிலை சீராக இல்லாதபோது தங்கத்தில் முதலீடு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

அதேவேளையில் நீண்ட கால நோக்குடன் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கவில்லை என்றாலும்கூட, சீராக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்பதால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் முதலீடு செய்யலாம் என்கிறார் நாகப்பன்.

பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு – முதலீடு செய்யலாமா, கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

“அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு சந்தையில் மந்த நிலை நீடிக்கும். இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் நன்றாகச் செயல்படுகின்றன. ஆனால், இதுவரை இருந்த அதீத மதிப்புக்கு நிகராகச் செயல்படவில்லை. இந்த நிலையில், ஒன்று நிறுவனத்தின் செயல்பாடு அதற்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான மதிப்புக்கு நிகராகச் செயல்பட வேண்டும் அல்லது அதன் செயல்பாட்டுக்கு நிகராக சந்தையின் மதிப்பு குறைய வேண்டும்.

இந்தச் சமநிலை திரும்புவதற்குச் சில காலம் எடுக்கும். அதற்குத் தேவையான இரு காலாண்டுகளில், சந்தை இறங்குமுகமாகவோ அல்லது எந்த மாற்றமும் இல்லாமலோதான் இருக்கும். சந்தை மதிப்பு உயர்வதன் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்,” என்று குறிப்பிடுகிறார் நாகப்பன்.

ஆனால், “நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு, இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகள் முதலீடு செய்யச் சரியான காலமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

ஏனெனில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பங்குகளின் விலை குறையும்போது அதிகமாக வாங்க முடியும். பிறகு விலை உயரும்போது அதை மீண்டும் விற்றுப் பயனடையலாம்,” என்று குறிப்பிட்டார் நாகப்பன்.

பின்குறிப்பு: முதலீடு குறித்த பரிந்துரைகள் யாவும் பொருளாதார வல்லுநர்களின் சொந்தக் கருத்துகளே.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.