மூன்று பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை – யார் இவர்?
மூன்று பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை – யார் இவர்?
இந்தியாவில் பெண் விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY) விருது ஐந்தாவது முறையாக வழங்கப்படவுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து வீராங்கனைகள்: கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் மனு பாக்கர் மற்றும் அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
2023 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிறந்து விளங்கிய ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
அனைவரும் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்க வரவேற்கப்படுகின்றனர்.
அவ்னி லேகரா – இவர் ஒரு பாரா விளையாட்டு வீரராவார். 23 வயதாகும் அவர் துப்பாக்கி சுடுதலில் மூன்று பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை ஆவார்.
2020 பாராலிம்பிக் போட்டிகளில், அவர் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றார்.
2015ம் ஆண்டு கோடைக்கால விடுமுறையில் அவ்னிக்கு பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தப்பட்டது துப்பாக்கி சுடுதல். விரைவிலேயே போட்டிகளில் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதலில் தனக்கான அடையாளத்தை உருவாக்கினார்.
12 ஆண்டுகளாக விளையாடும் அவர் மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சிறந்த சாதனைகளுக்காக, அவ்னிக்கு பத்மஸ்ரீ மற்றும் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.