அநுராதபுரத்தில் காவல்துறையின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து விசாரணை நடத்துமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2025 பெப்ரவரி 03 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு நீதவான் அனுராதபுரம் காவல்துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரம், ரம்பேவ பிரதேசத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக காவல்துறையினர் நேற்று (20) மாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான உண்மைகளை அநுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனை அடுத்து அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த கைது உத்தரவை பிறப்பித்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதற்காகச் சென்றிருந்த வேளையில் ரம்பேவ பிரதேசத்தில் அவருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாத சூழல் ஏற்பட்டதாக இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.
விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி வாகனம் மற்றவர்களுக்கு இடையூறுறாக ஓட்டியதற்காக நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் அர்ச்சுனா கடும் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.