அமெரிக்க அதிபராக முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட முக்கிய உத்தரவுகள் என்ன? யாருக்கெல்லாம் சிக்கல்?
- எழுதியவர், கிரிஸ்டல் ஹேய்ஸ் & பில் மெக்காஸ்லாண்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் குடியேற்றம், காலநிலை, முதல் மன்னிப்புகள் வரை ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்கை முக்கியத்துவமிக்க பல்வேறு விவகாரங்கள் தொடர்பான செயலாக்கங்கள், அதிபர் குறிப்பாணைகள், மற்றும் செயல் உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
அதிபரின் செயல் உத்தரவுகளுக்கு சட்ட அங்கீகாரம் உண்டு, ஆனால் அவை அடுத்து வரும் அதிபர்களாலோ, நீதிமன்றங்களாலோ நிராகரிக்கப்படலாம். அந்த உத்தரவுகளில் பல சட்ட சிக்கல்களை சந்திக்கலாம். பதவியேற்று சில மணி நேரங்களிலேயே டிரம்ப் கொண்டுவந்த கொள்கை மாற்றங்களில் சில இதோ.
குடியேற்றம்
எல்லைப் பகுதியில் தேசிய அவசர நிலை
நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். கையெழுத்திடும்போது “இது பெரிய நடவடிக்கை” என டிரம்ப் கூறினார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். ஆனால் அது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை.
எல்லையை மூடுதல்
எல்லையை மூடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப்பொருட்கள், மனித கடத்தல், எல்லையை கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாக கூறினார்.
கும்பல்களை பயங்கரவாதிகளாக அறிவிப்பு
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களையும் அந்நிய பயங்கவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அல்-கயீதா, ஐ.எஸ், ஹமாஸ் போன்ற அமைப்புகள் கொண்ட பட்டியலில் சால்வடார் குடியேற்ற கும்பலான எம்எஸ் – 13 மற்றும் வெனிசுவேலா கும்பலான டிரென் டி அரகுவா ஆகியவையும் சேர்க்கப்படும்.
மதில் சுவர் கட்டுவதை தொடருதல்
தெற்கு எல்லையில் அவசர நிலை பிரகடனத்தின் ஒரு பகுதியாக, தெற்கு எல்லைப் பகுதியில் கூடுதலாக தடுப்புகளை கட்டுவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்ள முகமை தலைவர்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவு செயல் உத்தரவு இல்லை என்பதால் இந்த முயற்சிகளுக்கு நிதி எப்படி கிடைக்கும் என்பதில் தெளிவில்லை. டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்திலும் இதுவேதான் முக்கிய தடையாக இருந்தது.
2026-ல் டிரம்ப் முதல் முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மதில் சுவர் எழுப்ப அவர் செயல் உத்தரவு பிறப்பித்தார். ஒரு சில பகுதிகளில் தடுப்புகள் கட்டப்பட்டாலும், பெரும்பாலானவை முடிக்கப்படாமலே விடப்பட்டிருந்தன.
‘மெக்ஸிகோவிலேயே இருங்கள்’
‘மெக்ஸிகோவிலேயே இருங்கள்’ என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தியிருக்கிறார்.
அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்க தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்ஸிகன் அல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
விமானத்தில் வரும் குடியேறிகளை நிறுத்துவது
அதே உத்தரவிலேயே, பைடன் காலத்தில் கியூபா, ஹைட்டி, நிகாரகுவா, வெனிசுவேலா போன்ற நாடுகளைச் சேர்ந்த 30,000 பேர் அமெரிக்காவில் குடியேற பயன்பட்ட திட்டத்தையும் டிரம்ப் நிறுத்திவிட்டார்.
சிஹெச்என்வி என அறியப்படும் இந்த கொள்கை, சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என பைடன் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
டிக்டாக்
சீனாவுக்கு சொந்தமான சமூக ஊடக தளமான டிக்டாக்கை தடைசெய்யும் சட்டம் செயல்படுத்தப்படுவதை 75 நாட்களுக்கு நிறுத்திவைக்கும் உத்தரவு ஒன்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக டிரம்பின் வாக்குறுதிகளை வரவேற்ற டிக்டாக், அவர் பதவியேற்புக்கு முன் தற்காலிகமாக நிறுத்திவைத்த அமெரிக்க சேவையை மீண்டும் தொடங்கியிருக்கிறது.
டிக்டாக் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க ஒரு அமெரிக்க நிறுவனத்தை கண்டுபிடிக்க டிக்டாக்கிற்கு தனது உத்தரவு கூடுதல் அவகாசம் அளிக்கும் என டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் அவர் கையெழுத்திட்ட உத்தரவின் விவரங்களில் தெளிவில்லை.
அவரது நடவடிக்கை என்ன பயன் தரும் என கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘அதை விற்கவோ அல்லது மூடவோ’ அவர்களுக்கு உரிமை தருவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
முன்னதாக டிக்டாக்கை தடை செய்வதற்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பரப்புரை காணொளி பல கோடி பார்வைகளை பெற்ற பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக உணர்த்தினார்.
அரசு சீர்திருத்தம்
டோஜ் மற்றும் ஈலோன் மஸ்க்
அரசின் செலவுகளை குறைப்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக Department of Government Efficiency (Doge) எனப்படும் அரசு திறன்மேம்பாட்டுத் துறை எனும் ஏஜென்சியை உருவாக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஈலோன் மஸ்க் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான மஸ்க்கிடம் இந்த முகமைக்காக 20 பணியாளர்களுக்கான அலுவலகம் வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.
மத்திய ஆட்சேர்ப்பு நிறுத்திவைப்பு
டிரம்ப் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் கிடைக்கும் வரை அமெரிக்க ராணுவம் மற்றும் சில பிரிவுகள் தவிர மற்ற அனைத்து மத்திய ஆட்சேர்ப்பையும் நிறுத்திவைத்து டிரம்ப் உத்தரவிட்டார்.
தணிக்கை
”கருத்துச் சுதந்திரத்தை மீண்டும் வழங்கி, அரசு தணிக்கையை தடுக்கும் உத்தரவு” ஒன்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த உத்தரவு என்ன செய்யும் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
நீதித்துறை, பங்கு வர்த்தக ஆணையம், மத்திய வர்த்தக ஆணையம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் கடந்த கால ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த அரசு தலைமை வழக்கறிஞருக்கு இதன் மூலம் உத்தரவிடப்படுள்ளது.
அரசியல் வழக்குகள்
”அரசியல் எதிராளிகளுக்கு எதிராக அரசை ஆயுதமாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு” ஒரு ஆவணத்தில் புதிய அதிபர் கையெழுத்திட்டார். இதன் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் நடைமுறையை தொடங்குவதற்கான செயல் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
“ஓ, இது ஒரு பெரிய நடவடிக்கை” என அந்த ஆவணத்தில் கையெழுத்திடும்போது அவர் கூறினார். உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகவேண்டும் என டிரம்ப் உத்தரவிடுவது இது இரண்டாவது முறை.
கோவிட் -19ஐ உலக சுகாதார நிறுவனம் கையாண்ட விதத்தை விமர்சித்த டிரம்ப், பெருந்தொற்று காலத்திலேயே அந்த நிறுவனத்திலிருந்து விலகும் நடவடிக்கையை தொடங்கினார். அதிபர் ஜோ பைடன் பின்னர் அந்த முடிவை மாற்றினார்.
பைடனின் கொள்கைகளை மாற்றுதல்
பைடன் கால விதிமுறைகள்
தமது இரண்டாம் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் டிரம்ப் கையெழுத்திட்ட ஆவணங்களில் ஒன்று, சுமார் 80-க்கும் மேற்பட்ட பைடன் ஆட்சிக்கால விதிமுறைகளை ரத்து செய்ததுதான். இந்த விதிமுறைகள் எவை என்பது குறித்து டிரம்ப் விளக்கவில்லை.
பன்முகத்தன்மை மற்றும் பாலினம்
மூன்றாம் பாலினத்தவர்
அமெரிக்கா ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்ற செயல் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார். இந்த பாலினங்கள் மாற்றக்கூடியவை அல்ல என்றும் அடிப்படையான மறுக்கமுடியாத உண்மையை அடித்தளமாக கொண்டது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அரசு தொடர்புகள், பொது உரிமைகள் காப்பு, மத்திய நிதியளிப்பு, சிறைகள் உள்ளிட்டவற்றில் மூன்றாம் பாலின கொள்கையை பாதிக்கும். பாஸ்போர்ட், விசா போன்ற அரசு ஆவணங்களையும் இந்த உத்தரவு பாதிக்கும்.
டிஇஐ
அதே செயல் உத்தரவில், ‘பாலின சித்தாந்தத்தை’ ஊக்குவிக்கும் அனைத்து அரசு திட்டங்கள், கொள்கைகள், அறிக்கைகள் மற்றும் தொடர்புகளையும் நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு செயல் உத்தரவின் மூலம், அமெரிக்க அரசின் ‘பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்குதல்’ (டிஇஐ) திட்டங்கள் அனைத்தையும் அவர் நிறுத்தி வைத்தார்.
”தீவிர மற்றும் அநாவசிய அரசு டிஇஐ திட்டங்கள் மற்றும் முன்னுரிமையளித்தலை முடிவுக்கு கொண்டு வருதல்” என இந்த உத்தரவிற்கு பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் நிதி அல்லது அரசின் ஒப்பந்தங்கள் பெற்றுள்ள நிறுவனங்களுக்கும் மத்திய முகமைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
தனியார் துறையை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளையும் எடுக்கவிருப்பதாக புதிய நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
மெக்ஸிகோ வளைகுடா பெயர்மாற்றம்
‘அமெரிக்கா வளைகுடா’
மெக்ஸிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றம் செய்யும்படி உள்துறை அமைச்சருக்கு பிறப்பித்த உத்தரவு, டிரம்ப் கையெழுத்திட்ட முதல் செயல் உத்தரவுகளில் ஒன்று.
பொருளாதாரம்
பணவீக்கத்தை எதிர்கொள்ளுதல்
அமெரிக்கர்களின் வாழ்க்கைச் செலவு பிரச்னைகளை கவனிக்கும்படி அமெரிக்க அரசின் துறைகள் மற்றும் முகமைகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
இந்த ஆவணத்தின் விவரங்கள் மற்றும் ஒவ்வொரு துறையும் எவ்வாறு இப்பிரச்னையை எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.
காலநிலை மற்றும் ஆற்றல்
பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து (மீண்டும்) விலகல்
பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகும் உத்தரவு டிரம்ப் கையெழுத்திட்ட முதல் ஒப்பந்தங்களில் ஒன்று.
பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் 2017-ல் முதல் முறை வெளியேறினார், பின்னர் பைடன் 2021ஆம் ஆண்டில் மீண்டும் அதில் இணைந்தார்.
ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ளும் உத்தரவில் கையெழுத்திட்டதுடன், விலகல் தொடர்பாக விளக்கமளித்து ஐக்கிய நாடுகளுக்கு எழுதப்பட்ட கடிதத்திலும் கையெழுத்திட்டார்.
தேசிய ஆற்றல் அவசரநிலை
தேசிய ஆற்றல் அவசர நிலையை பிரகடனப்படுத்திய டிரம்ப், கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரிப்பதாக உறுதியளித்தார்.
கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான “அலாஸ்காவின் அசாதாரண வளங்கள், ஆற்றலை வெளிப்படுத்துதல்” என்ற பெயரிலான செயல் உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.
கூடுதலாக அமெரிக்க புதைபடிவ எரிபொருளை எடுக்க தொடர்ந்து தோண்டப்போவதாக புதிய அமெரிக்க அதிபர் உறுதியளித்தார்.
பசுமை புதிய ஒப்பந்தத்திற்கு முடிவு
பசுமை புதிய ஒப்பந்தம் என்ற பெயரில் பைடன் நிர்வாகத்தால் புதைபடிவ எரிபொருள் தொழிலைக் கட்டுப்படுத்தவும், மாசை குறைக்கவும், பசுமை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பணவீக்க குறைப்புச் சட்டம் மற்றும் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு தொடர்பான மற்றொரு சட்டம் மூலம் திரட்டப்பட்ட நிதிகளை நிறுத்தும்படி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மின்சார வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட டிரம்ப் அதை திரும்பப்பெறும் வகையில் காற்றாலைகளுக்கு ஒப்பந்தம் வழங்குவதை அமெரிக்க நிறுத்தும் என தெரிவித்தார்.
கேபிடல் கலவரம்
நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 1500 பேருக்கு மன்னிப்பு
கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனது ஆதரவாளர்கள் சுமார் 1,500 பேருக்கு மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை பிணயக்கைதிகள் என டிரம்ப் அடிக்கடி குறிப்பிட்டதுண்டு. குறைந்தது 600 பேர் மத்திய அதிகாரிகளை தாக்கியதாக அல்லது தடுத்ததாக குற்றம்சட்டப்பட்டது.
ஓத் கீப்பர்ஸ் மற்றும் பிரவுட் பாய்ஸ் அமைப்பினரின் தண்டனை குறைப்பு
நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக நாட்டிற்கு துரோகம் செய்ததாக தண்டனை விதிக்கப்பட்ட வலதுசாரி ஓத் கீப்பர்ஸ் மற்றும் பிரவுட் பாய்ஸ் என்ற அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் தண்டனையை குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
தேசத்துரோக சதித்திட்டத்திற்காக 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரவுட் பாய்ஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் ஹென்றி ‘என்ரிக்’ டேரியோவும் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு