அர்ச்சுனா எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (21) போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விசேட அதிதிகளுக்கான விளக்குகளை பயன்படுத்தி தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன்போது,போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அர்ச்சுனாவின் வாகனத்தை நிறுத்தி அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.
பின்னர், அர்ச்சுனா ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, போக்குவரத்து சட்டங்கள் மற்றும் குற்றவியல் நடைமுறைகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.