டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்? இதற்கும் டிரம்புக்கும் என்ன தொடர்பு?
- எழுதியவர், அஜித் கத்வி
- பதவி, பிபிசி தமிழ், சென்னை
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து நாணயங்களும் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.
ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை அன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 86.64 ஆக குறைந்து, இறுதியாக 86.63 ஆக முடிந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கும் போது, ரூபாயை வலுப்படுத்தவும், அதிக மதிப்பிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரை விற்பனை செய்கிறது.
இம்முறையும் அவ்வாறே செய்யப்பட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி , ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பு குறைவதைத் தடுக்க டாலரை விற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி தலையிடாமல் இருந்திருந்தால், டாலர் மதிப்பு குறைந்தது 86.70ஐ எட்டியிருக்கும் என்று ஒரு தனியார் வங்கியின் நாணய விற்பனையாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைவதும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதும் ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
டாலர் மதிப்பு ஏன் வலுவடைகிறது?
அமெரிக்காவின் புதிய அரசியல் சூழ்நிலை காரணமாக டாலர் வலுவடைகிறது. டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், இதனால் டாலரின் மதிப்பு பல வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மதிப்பை எட்டியுள்ளது என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
புதிய அமெரிக்க அரசாங்கம், வளர்ச்சி சார்ந்த மற்றும் பணவீக்கம் சார்ந்த கொள்கைகளை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, சில நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யூரோ, ஜப்பானிய யென், பிரிட்டிஷ் பவுண்ட், கனடிய டாலர், ஸ்வீடிஷ் க்ரோனா மற்றும் சுவிஸ் பிராங்க் போன்ற உலகின் ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை அளவிடுவது டாலர் குறியீட்டு மதிப்பு என அழைக்கப்படுகிறது.
செப்டம்பர் மாத இறுதியில் இருந்து, இந்தக் குறியீடு சுமார் 10 சதவீதம் அதிகரித்து, இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது, அனைத்து நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் குறைந்து வருகின்ற வேளையில் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகளை மனதில் கொண்டு, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தீர்மானிக்கின்றனர்.
இது மற்ற பொருளாதாரங்கள் மற்றும் நாணயங்களின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
டிரம்ப் இதற்கு முன் இத்தகைய கொள்கையை கடைபிடித்தார். டாலரும் இதேபோன்ற வலிமையோடு இருந்தது.
டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த காலத்தில், சீனா மற்றும் மெக்சிகோ மீது அதிக வரிகளை விதித்தார்.
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு இடையில் டாலரின் மதிப்பு கிட்டத்தட்ட 13 சதவிகிதம் அதிகரித்தது.
ரூபாய் மதிப்பு சரிவு ஏன் கவலை அளிக்கிறது?
டாலர் என்பது பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய நாணயம்.
டாலரின் மதிப்பு உயர்ந்தால், உலகளாவிய சந்தையில் பொருட்களை வாங்குவதற்கு அதிக செலவாகும்.
உதாரணமாக, சில காலத்திற்கு முன்பு டாலரின் விலை 80 ரூபாயாக இருந்த போது, 100 டாலர் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்க 8000 ரூபாய் செலவானது. ஆனால் இப்போது அதை வாங்க 8600 ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கும்.
டாலர் வலுவடையும் போது மற்றும் ரூபாய் பலவீனமடையும் போது, பணவீக்கம் பொதுவாக உயரும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இது பெட்ரோல், டீசல் மற்றும் அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் அதிகரித்து, போக்குவரத்து செலவையும் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து, இறுதியில் எல்லா பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.
டாலர் மதிப்பு அதிகமாகும் போது, வெளிநாடுகளில் படிப்பதற்கான கல்விச் செலவு அதிகமாகும். பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அதிக ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. வெளிநாடு பயணத்திற்கு கூட முன்பை விட அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, மளிகைச் சாமான்கள் முதல் ஆடைகள் மற்றும் மின்சாரம் தொடங்கி, மின்னணு பொருட்கள் வரை பல்வேறு பொருட்களின் விலை உயரத் தொடங்குகின்றன.
தொலைபேசி, மடிக்கணினி, இறக்குமதி செய்யப்பட்ட பேட்டரிகள், வாகனங்கள் உட்பட எல்லாவற்றின் விலையும் உயர்கிறது. மறுபுறம், ரூபாய் மதிப்பு வலுவிழந்தால், அதன் தாக்கம் அனைவராலும் உணரப்படும்.
ரூபாயின் மதிப்பு சரியும் போது, இறக்குமதி சார்ந்த வணிகம் அதிகம் பாதிக்கப்படுகின்றது. அதே சமயம் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பலனடைகின்றன.
எனவே டாலரின் மதிப்பு உயர்வது, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழில்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்?
இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிதப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அது மட்டுமின்றி, சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இந்தியா இன்னும் 88 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதால், டாலர் மதிப்பு உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பதால் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கலாம். அதாவது ஏற்றுமதியால் கிடைக்கும் வருவாயை விட இறக்குமதி செலவு அதிகமாக இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், வட்டி விகிதங்கள் அதிகரித்தால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
இறக்குமதி சார்ந்த தொழில்களில், எரிசக்தி, மின்னணு பொருட்கள், ரசாயனங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் கடன் வாங்கியுள்ள நிறுவனங்களும் டாலரில் பணம் செலுத்த அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மறுபுறம், பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படும்.
ரூபாய் வலுவிழந்ததா அல்லது டாலர் வலுப்பெற்றதா?
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாகவும், ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தின்படி, 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி, நரேந்திர மோதி முதல்முறையாக பிரதமரான போது,டாலர் மதிப்பு ரூ.58.58 ஆக இருந்தது.
தற்போதைய விகிதத்துடன் ஒப்பிடுகையில், டாலரின் மதிப்பு ரூபாய்க்கு எதிராக சுமார் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னதாக, 2004-ஆம் ஆண்டு, மே 22-ஆம் தேதி மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றபோது, டாலரின் மதிப்பு ரூ.45.33 ஆக இருந்தது.
அவரது 10 ஆண்டு பதவிக்காலத்தின் முடிவில் டாலர் மதிப்பு 58ஐத் தாண்டியது, அதாவது மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூபாய்க்கு எதிராக டாலர் மதிப்பு 29 சதவீதம் உயர்ந்தது.
இருப்பினும், இந்தியா அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலையில் இருந்து ரூபாய் மதிப்பு மேலும் குறைய வாய்ப்பில்லை என்பது அவர்களின் கருத்து.
நிபுணர்கள் கூறுவது என்ன?
“ரூபாய் வலுவிழக்கவில்லை, ஆனால் டாலர் வலுப்பெற்றுள்ளது” என்று ஐஐஎம் அகமதாபாத்தில் முன்னாள் பேராசிரியரும், இப்போது கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் பொருளாதாரத்தின் மூத்த பேராசிரியருமான செபாஸ்டியன் மோரிஸ் பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இங்கிருந்து ரூபாய் மதிப்பு மேலும் குறைய வாய்ப்பில்லை. பணவீக்கத்தின் தாக்கம் அரை சதவீதம் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு நிவாரணம் அளிக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை அரசு குறைக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் மோரிஸ் மேலும் கூறுகையில், “டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மட்டும் அல்ல, அனைத்து முக்கிய நாணயங்களும் சரிந்துள்ளன. இதற்கு இரண்டு மூன்று காரணங்கள் உள்ளன.
ஒன்று, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதால், அமெரிக்க பெடரல் வங்கி கிட்டத்தட்ட இரண்டு காலாண்டுகளுக்கு வட்டி விகிதத்தை குறைக்காது. இரண்டாவதாக, டிரம்பின் கொள்கை அமெரிக்காவில் தொழில்துறையை ஈர்ப்பதாகும். உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மையில் உள்ள சூழல் மூன்றாவது காரணமாக உள்ளது” என்றார்.
இதனால், “தகவல் தொழிநுட்பம், மருந்துகள், மின்னணு பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியும் பலனடையக்கூடும்” என்றும் அவர் கூறுகிறார்.
சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும், ரூபாய் மதிப்பு சரிவு குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.
“உண்மையில், அனைத்து நாணயங்களுக்கும் எதிராக டாலர் வலுவடைகிறது. யூரோவைப் பார்த்தால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு டாலரின் மதிப்பு யூரோவில் 91 சென்டாக இருந்தது. இப்போது அதுவே, 98 சென்டாகியுள்ளது. அதாவது யூரோ மதிப்பு குறைந்துள்ளது. அதுபோல் ரூபாய் மதிப்பு 83-ல் இருந்து 86-க்கு சென்றுள்ளது” என்று ரகுராம் ராஜன் குறிப்பிடுகின்றார்.
அவரைத் தொடர்ந்து, ” வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளன, ஆனால், ஓராண்டாக அவற்றை திரும்பப் பெறுகின்றன. இதனால் தேவை உருவாகி ரூபாயின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தவிர, இந்தியா 710 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை பதிவு செய்துள்ளது. 670 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனும் உள்ளது, இதற்காக அதிகளவில் அமெரிக்க டாலரில் வட்டி செலுத்த வேண்டியுள்ளது” என்று பொருளாதார நிபுணர் ஹேமந்த்குமார் ஷா தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “தற்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அல்லது சிஏடி) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கு அருகில் உள்ளது. இது கடந்த ஆண்டு 0.70 சதவீதமாக இருந்தது. டாலர் மதிப்பு மிகவும் உயர்ந்துள்ளது. இறக்குமதியை ஈடு செய்யும் அளவுக்கு ஏற்றுமதியில் இந்தியா வருமானம் ஈட்டவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
அது மட்டுமின்றி, “வரும் நாட்களில் சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய், கனரக இயந்திரங்களின் விலை உயரும். அதன் காரணமாக மற்ற பொருட்களின் விலையும் உயரும் மேலும், டெல்லி தேர்தலுக்குப் பிறகு, பெட்ரோல், டீசல் விலையை அரசு உயர்த்தலாம்” என ஹேமந்த் குமார் ஷா நம்புகிறார்.
ரூபாயின் மதிப்புக்கு என்ன ஆகப் போகிறது?
இது குறித்துப் பேசிய, கேரேஜ் ரேட்டிங் எனப்படும் ரேட்டிங் ஏஜென்சியின் இணை பொருளாதார நிபுணர் மிஹிகா ஷர்மா பேசியபோது,”வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) வலுவான டாலர் மற்றும் அதிக மதிப்பளிக்கும் அமெரிக்கப் பத்திரங்களின் காரணமாக இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து தங்களின் மூலதனத்தை திரும்பப் பெறுகின்றனர். வளரும் நாடுகளின் அனைத்து நாணயங்களுக்கும் சந்தையில் அழுத்தம் கொடுத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் ரூபாய் மதிப்பு குறைய ஒரு காரணம்” என்று பிபிசி குஜராத்தியிடம் கூறினார்.
அவர் கூறுகையில், “குறுகிய காலத்திற்கு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 86 முதல் 87 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை ஏற்ற, இறக்கம் காரணமாக ரூபாயின் மதிப்பு மேலும் வலுவிழக்க கூடும். இருப்பினும், டிரம்பின் வரிக் கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லாததால், டாலர் மதிப்பு சற்று குறையக்கூடும், இது ரூபாய்க்கு உதவும். இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த முன்வரலாம்”என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நிபுணரான மிஹிகா ஷர்மா தொடர்ந்து கூறுகையில், “ரூபாய் மதிப்பின் சரிவு இறக்குமதி செலவுகளை அதிகரிக்கும். ஆனால் மற்ற விநியோக-தேவை காரணிகளும் விலையை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 2025-ம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் (CPI) 4.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே 2026-ஆம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக குறையும். பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைக்கலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும் “சேவைத் துறையில் வலுவான ஏற்றுமதி உள்ளதன் காரணமாக 2025-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதமாகக் குறையும்.”எனவும் மிஹிகா ஷர்மா சுட்டிக்காட்டினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.