by guasw2

இந்திய அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியிலேயே ஆரம்பித்துவிட்டன திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீட்பு மற்றும் கிழக்கில் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் என்பன எமது ஆட்சி காலத்திலிலேயே இடம்பெற்றன. எனவே தற்போது கிழக்கில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுமையாக கூறுவதற்கு எதுவும் இல்லை.

2020இன் பின்னர் நான் தயாரித்த ஆடையை தற்போது ஜனாதிபதி அநுர அணிந்து செல்வதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உருமய கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை (20)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மிகக் குறுகிய காலத்தில் மின் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். மூன்றில் இரண்டு எனக் கூறினால் மக்களுக்கு புரியாது என்பதற்காக 9000 ரூபா கட்டணம் 6000 ஆகக் குறைக்கப்படும் என்று உதாரணத்துடன் குறிப்பிட்டார்.

ஆனால் ஆட்சியைப் பொறுப்பேற்று 4 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அரசாங்கத்துக்கு இன்னும் அந்த ‘மிகக் குறுகிய காலம்’ தோன்றவில்லை.

ஆனாலும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 20 சதவீதத்தால் மின் கட்டண குறைப்பை பரிந்துரைத்துள்ளது. ஆணைக்குழுக்கள் இவ்வாறு சுயாதீனமாக செயற்படும் போது அவற்றின் தலைவர்கள் பதவி நீக்கப்படுவார்களேயன்றி, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.

இம்முறை என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மக்கள் செல்வாக்கு குறைந்து வருவதை அறிந்து கொண்டதாலேயே மின்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒத்துழைப்புடன் கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி புதிதாக எதையும் கூற வேண்டியதில்லை. காரணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நாம் அவற்றுக்கான அனைத்து பணிகளையும் நிறைவு செய்துவிட்டோம்.

2020இல் நாம் ஆட்சியமைத்த போது 99 எண்ணெய் தாங்கிகளும் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. சுமார் 75 ஆண்டுகளின் பின்னர் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்ட 14 எண்ணெய் தாங்கிகளைத் தவிர, ஏனைய அனைத்தையும் மீளப் பெறுவதற்கு நாமே நடவடிக்கை எடுத்திருந்தோம்.

எனது ஆடையையை தற்போதைய ஜனாதிபதி அணிந்து செல்வது நகைப்பிற்குரியதாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டு அவர்களது உத்தியோகபூர்வ இருப்பிடங்கள் பறிக்கப்பட்டால், எதிர்காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் குழுவினர் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே அரச தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்