புதிய விமான நிலையத்தை எங்கு அமைப்பது?- விஜய்க்கு அண்ணாமலை கேள்வி

by smngrx01

புதிய விமான நிலையத்தை சென்னையில் எங்குதான் அமைப்பது? என  நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் தமிழக பா.ஜனதா கட்சியின்  தலைவர் அண்ணாமலை,  கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையத்தை  அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த 900 நாட்களுக்கு மேலாகப்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று ( 20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது உரையாற்றிய விஜய்  ‘கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேல் உங்கள்  மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருடனும் நான் நிற்பேன். தொடர்ந்து நிற்பேன். நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமானவர்கள் விவசாயிகள்தான்.  அதனால் விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடு இருந்தேன்.  அதற்கு சரியான இடம் இதுதான்.  ‘என்னுடைய கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்துதான் தொடங்குகிறது.

தவெக-வின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு. ‘காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரபரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தினேன்.’

இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகளைப் பாதிக்கும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம், அதை மீண்டும் உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன்.

இந்நிலையில் விஜய் தெரிவித்த கருத்துக்கள்  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ”இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெறும் 1,000 ஏக்கரில் மட்டும் சென்னை விமான நிலையம் இருக்கிறது.

டெல்லி 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும்,  ஐதராபாத் 5 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும்,  பெங்களூரு 4 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலும்  விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2.50 கோடி பயணிகளை சென்னை விமான நிலையம் கையாள்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 10 கோடியாகும். பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரையில் 73 விமான நிலையங்கள்தான் இருந்தது.

இன்றைக்கு விமான நிலையங்கள் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்று கேட்டார்.

ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2019-ம் ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூர், மாமண்டூர் ஆகிய 2 ஊரின் பெயர்கள் இடம் பெற்றது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாமண்டூரை விட்டுவிட்டு பரந்தூர், பன்னூர் ஆகிய 2 ஊரின் பெயர்களை அனுப்பினார்கள்.

அ.தி.மு.க.இ தி.மு.க. அரசு அனுப்பிய 2 பட்டியலிலும் பரந்தூர் இருந்தது. மத்திய அரசு தானாக வந்து பரந்தூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு எடுக்கவில்லை. விஜய் ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்றால் அவர் அடுத்து எந்த இடத்தை பரிந்துரை செய்வார்.

சென்னை அருகில் விமான நிலையம் அமைக்க 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேண்டும். எந்த இடத்தை தேர்வு செய்வது என்ற தீர்வையும் தரவேண்டும். ஆக்கப்பூர்வமாக பிரச்சினையை கையாண்டு அதற்கு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வர முடியும்.

விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற போகிறாரா? அல்லது நெருப்பை அணைத்துவிட்டு தீர்வை கொடுக்கப்போகிறாரா? என்பதுதான் முக்கியம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சொல்வது தவறு’ இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்