அரசாங்கத் திறன் துறையின் (DOGE) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருக்கு மகனாக பிறந்த விவேக் ராமசாமி ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர். குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.
சமீபத்தில், ‘அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்குவர்’ என ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் அதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, எலான் மஸ்க் மற்றும் அவரது குழுவினர் அரசாங்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவில் நான் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேவேளை விவேக் இராமசாமிக்கும் DOGE குழுவில் இருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் அரசு நிர்வாகத்தில் உள்ள பலரை நீக்குவார். அவர் வரும் நாட்களில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.